சாலைகள் நன்றாக இருந்தால் விபத்துகள் அதிகரிக்கும் - பாஜக எம்பியின் அதிர்ச்சி கருத்து
மோசமான சாலைகள் விபத்துகளைக் குறைக்கும் என்று பாஜக எம்பி வினோத கருத்து

நல்ல சாலைகளால் அதிகம் விபத்துகள் ஏற்படுவதாகவும் மோசமான சாலைகள் விபத்துகளை குறைக்கும் எனவும் தெலங்கானா பாஜக எம்பி கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி வினோதமான கருத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை, தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் அரசுப் பேருந்து மீது மோதியதில் 19 பேர் கொல்லப்பட்டனர், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தெலங்கானா அரசு மாநிலத்திலிருந்து ரூ.5 லட்சமும், டிஜிஎஸ்ஆர்டிசியிலிருந்து ரூ.2 லட்சமும் இழப்பீடு அறிவித்தது, இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் மொத்தம் ரூ.7 லட்சம். காயமடைந்த ஒவ்வொருவருக்கும் கூடுதலாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்த நிலையில், தெலங்கானா பாஜக எம்பி கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “இப்போதெல்லாம், சாலைகள் மோசமான நிலையில் இருப்பதால் வாகனங்கள் மெதுவாகச் செல்கிறது. இதனால் விபத்துக்கள் குறையும். சாலைகள் சிறப்பாக இருந்தால், விபத்துகள் பெரிதாகவும் அடிக்கடி நிகழ்கின்றன” என்று கூறினார்.
மேலும், மோசமான சாலைகள் விபத்துகளைக் குறைப்பதை உறுதி செய்யும் என்று வலியுறுத்திய அவர், முந்தைய பிஆர்எஸ் ஆட்சியில் தரமான சாலைகள் அமைக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், தான் முதல் முறையாக எம்.பி.யானபோது, அப்போதைய பி.ஆர்.எஸ் அரசிடம் சாலையைச் சரிசெய்யுமாறு கோரிக்கை விடுத்தேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை. பின்னர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுமாறு கேட்டுக் கொண்டதாகவும், ஹைதராபாத்-பிஜாப்பூர் தேசிய நெடுஞ்சாலையுடன் அறிவிக்கப்பட்ட எட்டு தேசிய நெடுஞ்சாலைகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும் கூறினார்.





















