"கடவுளிடம் நேரடியாக பேசுகிறேன்.. அடுத்த ஜன்மத்தில் மிருகமா பிறப்பீங்க" சாபம் விட்ட பாஜக எம்எல்ஏ
தான் கடவுளுடன் நேரடியாக உரையாடுவதாகவும் ஜனநாயகத்தை விற்கும் நபர்கள் ஒட்டகங்களாகவும் செம்மறி ஆடுகளாகவும் வெள்ளாடுகளாகவும் நாய்களாகவும் பூனைகளாகவும் மீண்டும் பிறப்பார்கள் என பாஜக எம்எல்ஏ உஷா தாக்கூர் தெரிவித்துள்ளார்.

பணம், மதுபானம், பரிசுக்காக வாக்களிக்கும் மக்கள், அடுத்த ஜன்மத்தில் மிருகமாக பிறப்பார்கள் என பாஜக எம்எல்ஏவும் மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சருமான உஷா தாக்கூர் பேசி இருப்பது மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது. ஜனநாயகத்தை விற்கும் அத்தகைய நபர்கள் ஒட்டகங்களாகவும் செம்மறி ஆடுகளாகவும் வெள்ளாடுகளாகவும் நாய்களாகவும் பூனைகளாகவும் மீண்டும் பிறப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக எம்எல்ஏ என்ன பேசினார்?
தான் போட்டியிட்டு வெற்றிபெற்ற Mhow சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள ஹசல்பூர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இப்படிப்பட்ட கருத்துகளை கூறியுள்ளார். நிகழ்ச்சியில் அவர் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
"பாஜக அரசின் லட்லி பெஹ்னா யோஜனா மற்றும் கிசான் சம்மன் நிதி போன்ற பல திட்டங்கள் மூலம் ஒவ்வொரு பயனாளியின் கணக்குகளிலும் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் வருகின்றன. அதன் பிறகும், வாக்குகள் 1,000-500 (ரூபாய்)க்கு விற்கப்பட்டால், அது மனிதர்களுக்கு அவமானகரமான விஷயம்.
நீங்கள் யாருக்காக வாக்களிக்கிறீர்கள் என்பதை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். வாக்களிக்கும்போது உங்கள் நேர்மையை இழக்காதீர்கள். பணம், சேலை, கண்ணாடி மற்றும் மதுபானங்களை வாங்கிக்கொண்டு நடுநிலை வகித்தவர்கள், அடுத்த பிறவியில் நிச்சயமாக ஒட்டகங்கள், செம்மறி ஆடுகள், ஆடுகள், நாய்கள் மற்றும் பூனைகளாக பிறப்பீர்கள் என்பதை உங்கள் டைரியில் எழுதிக் கொள்ளுங்கள்.
"அடுத்த ஜன்மத்தில் மிருகமா பிறப்பீங்க"
ஜனநாயகத்தை விற்பவர்கள் இவர்களாக மட்டுமே பிறப்பார்கள். இதை எழுது வைத்து கொள்ளுங்கள். நான் கடவுளுடன் நேரடி உரையாடி வருகிறேன். என்னை நம்புங்கள்" என உஷா தாக்கூர் பேசியுள்ளார். அவரின இந்த கருத்து பெரும் நகைப்புக்கு உள்ளான நிலையில், இதுகுறித்து பின்னர் விளக்கம் அளித்த உஷா தாக்கூர், "கிராமப்புற வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறேன்.
ஜனநாயகம்தான் நமது வாழ்க்கை. அரசியலமைப்பு விதிகளின்படி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசாங்கம் பல திட்டங்களை செயல்படுத்துகிறது. ஆண்டின் 12 மாதங்களும் பொதுமக்களுக்கு சேவை செய்கிறது. அத்தகைய சூழ்நிலையில், தேர்தலின் போது எந்தவொரு சூழ்நிலையிலும் ஒருவர் தனது வாக்கை பணம், மது அல்லது பிற பொருட்களுக்கு விற்றால், அது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
நமது செயல்களின் அடிப்படையில் நமக்கு அடுத்த ஜன்மம் கிடைக்கிறது. நமது செயல்கள் மோசமாக இருந்தால், நாம் மனிதர்களாக மீண்டும் பிறக்க மாட்டோம்" என்றார்.
உஷா தாக்கூரின் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மிருணாள் பந்த், "தாக்கூரின் கருத்து அவரது பழமைவாத சிந்தனையை வெளிப்படுத்துகிறது" என்றார்.





















