அயோத்தியை தொடர்ந்து பத்ரிநாத்திலும் ஆளும் பாஜக படுதோல்வி.. எகிறி அடித்த காங்கிரஸ்!
மக்களவை தேர்தலில் அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வியை சந்தித்த நிலையில், பத்ரிநாத் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது.
நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 10இல் வெற்றிபெற்று மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது இந்தியா கூட்டணி. குறிப்பாக, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் தொகுதியில் ஆளும் பாஜகவை தோற்கடித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லக்பத் சிங் புடோலா வெற்றி பெற்றிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி பிரம்மாண்ட வெற்றி: மேற்குவங்கத்தில் 4 தொகுதிகளுக்கும் இமாச்சல பிரதேசத்தில் 3 தொகுதிகளுக்கும் உத்தரகாண்டில் 2 தொகுதிகளுக்கும் தமிழ்நாடு, மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிக்கும் கடந்த கடந்த 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, 6 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதை தவிர 4 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஒரு தொகுதியை கைப்பற்றியுள்ள பாஜக, ஒன்றில் முன்னிலை வகித்து வருகிறது.
பீகாரில் உள்ள ரூபாலி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட சங்கரி சிங் முன்னிலை வகித்து வருகிறார். 13 சட்டப்பேரவை தொகுதிகளில் பெரும் கவனம் ஈர்த்த தொகுதியாக மாறியுள்ளது உத்தரகாண்டில் அமைந்துள்ள பத்ரிநாத்.
பத்ரிநாத்திலும் பாஜக படுதோல்வி: இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் பத்ரிநாத்தில் பாஜக படுதோல்வியை சந்தித்திருக்கிறது. காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட லக்பத் சிங் புடோலா 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் பாஜக படுதோல்வியை சந்தித்திருந்தது. ராமர் கோயிலை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்த பாஜகவுக்கு அயோத்தியில் தோல்வி அடைந்தது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் பத்ரிநாத்தில் தற்போது ஆளும் பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்திருப்பது தேசிய அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டிலும் 2022ஆம் ஆண்டிலும் பாஜக வேட்பாளரே இங்கு வெற்றி பெற்றிருந்தார்.
இந்த முறை, பத்ரிநாத் தொகுதியில் 28,161 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் லக்பத் சிங் புடோலாவை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ராஜேந்திர சிங் பண்டாரி 22,937 வாக்குகள் பெற்றுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவி வகித்து வருகிறார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்தரகாண்டில் உள்ள 5 தொகுதிகளிலும் பாஜகவே வெற்றிபெற்றிருந்தது.