'அரசுகளை கவிழ்க்க ரூ.6300 கோடி! பாஜக ஒரு சீரியல் கில்லர்' - கொதித்து பேசிய கெஜ்ரிவால்
"அரசுகளை கவிழ்ப்பதற்காக இதுவரை 6,300 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர். அரசுகளை கவிழ்க்காமல் இருந்திருந்தால் கோதுமை, அரிசி, மோர் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி விதிக்க வேண்டிய அவசியமில்லை"
நாட்டில் பிற கட்சிகளின் ஆட்சியை கவிழ்க்க பாஜக 6,300 கோடி ரூபாயை செலவழிக்கவில்லை என்றால், மத்திய அரசு உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்க வேண்டியிருக்க வேண்டிய தேவை வந்திருக்காது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாஜகவை அவர் 'மாநில அரசுகளின் சீரியல் கில்லர்' என விமர்சித்திருந்தார். டெல்லி சட்டப்பேரவையில் பேசிய கெஜ்ரிவால், ஜிஎஸ்டி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலம் வசூலிக்கப்பட்ட பணத்தை பாஜக எம்எல்ஏக்களை வேட்டையாட பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.
மற்ற கட்சிகளின் எம்எல்ஏக்களை வாங்குவதற்கும், மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும் பாஜக கோடிக்கணக்கான ரூபாய் செலவழிப்பதன் மூலம் விலைவாசி உயர்வின் பாதிப்பை மக்கள் எதிர்கொள்கின்றனர் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் சனிக்கிழமை குற்றம் சாட்டினார்.
தயிர், மோர், தேன், கோதுமை, அரிசி போன்றவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.7,500 கோடி வருவாய் கிடைக்கும் என்று கெஜ்ரிவால் இந்தியில் ட்வீட் செய்துள்ளார். "அரசுகளை கவிழ்ப்பதற்காக இதுவரை 6,300 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர். அரசுகளை கவிழ்க்காமல் இருந்திருந்தால் கோதுமை, அரிசி, மோர் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி விதிக்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் பணவீக்கத்தை சந்திக்க வேண்டியதில்லை" என்றும் அவர் கூறினார்.
டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவின் பரிந்துரையின் பேரில் கலால் வரி கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாக அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மற்றும் பலர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ததில் இருந்து ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே அரசியல் குழப்பம் தீவிரமடைந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக தலைநகரில் உள்ள சிசோடியாவின் வீடு மற்றும் நாட்டில் உள்ள 30 இடங்களிலும் சிபிஐ ஆகஸ்ட் 19 அன்று சோதனை நடத்தியது. சிசோடியாவை போலி வழக்கில் சிக்க வைத்து அவரது இமேஜைக் கெடுக்க சிபிஐயை மத்திய அரசு பயன்படுத்தியதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது.
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், கெஜ்ரிவாலின் பெருகிவரும் புகழ் மற்றும் அவரது ஆட்சி மாதிரியால் பாஜக அச்சம் அடைந்துள்ளதாக ஆம் ஆத்மி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சிபிஐ சோதனை நடைபெற்றதை தொடர்ந்து, சில பகீர் தகவல்களை சிசோடியா வெளியிட்டிருந்தார். தன் மீதான அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளையும் கைவிடுவதாகவும், அவர் கட்சி மாறி பாஜகவில் சேர்ந்தால் தன்னை டெல்லி முதலமைச்சராக நியமிப்பதாக பாஜக தன்னை அணுகியதாகக் கூறினார்.