பில்கிஸ் பானு வழக்கு.. நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள்... விதிகளை மீறியதா மத்திய அரசு? என்ன நடந்தது?
இந்த வழக்கில், தண்டனைக் கைதிகள் விடுதலை தொடர்பாக, மத்திய அரசு விதித்திருந்த விதிகளை, மத்திய அரசே மீறியுள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் கலவரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கலவரத்தின்போது, இஸ்லாமியர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவமும் அப்போது அரங்கேறியது.
இந்த கலவரத்தின்போது டோஹட் மாவட்டம் ராதிக்பூர் கிராமத்தை சேர்ந்த பில்கிஸ் பானு தன்னுடைய குடும்பத்துடன் கிராமத்தை விட்டு வெளியேறி வேறொரு பகுதிக்கு சென்றுள்ளார். பில்கிஸ் பானுவுக்கு அப்போது 21 வயது ஆகியிருந்தது. 5 மாதம் கர்ப்பிணியாகவும் இருந்தார். அவருக்கு 3 வயதில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தையும் இருந்தது.
பில்கிஸ் பானு தன்னுடைய குடும்பத்தின் 17 பேருடன் வேறு கிராமத்திற்கு புறப்பட்டபோது, மார்ச் 3ஆம் தேதி, ஷபர்வாட் என்னும் கிராமத்தில் 20-30 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டனர். பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தையை கொடூரமாக சுவற்றில் அடித்துக்கொன்றது அந்த கும்பல். கர்ப்பிணியான பில்கிஸ், அவரது அம்மா உட்பட 3 பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் 14 பேரை கொடூரமாக கொலை செய்தனர்.
இந்த வழக்கின் குற்றவாளிகளான 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், நன்னடத்தையின் அடிப்படையில் 11 குற்றவாளிகளையும் குஜராத் அரசு ஆகஸ்ட் 15ஆம் தேதி முன்கூட்டியே விடுவித்தது. இதில், பல விதி மீறல்கள் நடந்திருப்பதாக சில நாளிதழ்களில் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.
பில்கிஸ் பானு குற்றவாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்குவதற்கு முன்பே, இந்திய சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு தண்டனை ரத்து திட்டத்தின் மூலம் சிறையில் உள்ள குற்றவாளிகளை விடுவிப்பது குறித்து மத்திய அரசு விதிகளை வகுத்திருந்தது.
அதன்படி, தண்டனை ரத்து திட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 12 வகை குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிக்கக் கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் வகுத்த விதியில் கூறப்பட்டிருந்தது.
கடந்த ஜூன் 10 அன்று, ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் (75ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்) ஒரு பகுதியாக சில வகை குற்றங்களில் ஈடுபட்ட கைதிகளை மூன்று கட்டங்களாக விடுதலை செய்யலாம் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
அந்த வகையில், ஆகஸ்ட் 15, 2022, ஜனவரி 26, 2023 மற்றும் ஆகஸ்ட் 15, 2023 ஆகிய மூன்று தினங்களில் குற்றவாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசின் ஒப்புதல் தேவைப்பட்டது.
சிறை என்பது மாநிலப் பட்டியலில் இருப்பதால் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அல்லது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) போன்ற மத்திய அமைப்பு விசாரித்த வழக்குகளில் மத்திய அரசின் கருத்து தேவைப்படுகிறது. முதற்கட்டமாக நாடு முழுவதும் இருந்து 37 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
தண்டனை ரத்து திட்டத்தின் மூலம் யார் எல்லாம் விடுதலை செய்யப்படக் கூடாது என்பது குறித்த விதிகள் அடங்கிய கடிதத்தை கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அனுப்பினார். மத்திய உள்துறை செயலர் அஜய் குமார் பல்லாவும் இது தொடர்பாக மாநிலங்களுக்கு நினைவூட்டல் கடிதத்தை அனுப்பினார்.
இந்நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, பில்கிஸ் பானோ வழக்கில் தண்டனை பெற்று கோத்ரா சப்-ஜெயிலில் உள்ள 11 பேரை விடுதலை செய்ய உள்துறை அமைச்சகத்திடம் ஜூன் 28ஆம் தேதி குஜராத் அரசு கருத்துக் கேட்டது தெரிய வந்துள்ளது.
ஜூலை 11 அன்று, 11 கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 435 இன் கீழ் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் குஜராத் அரசுக்குப் பதிலளித்தது.
1992ஆம் ஆண்டு கொள்கையின்படி 11 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான மனுவை பரிசீலித்து, ஆகஸ்ட் 10ஆம் தேதி தண்டனை ரத்து செய்யப்பட்டதாக மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால், குஜராத் அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் மற்றொரு முக்கிய தகவல் இடம்பெற்றிருந்தது.
அதாவது, ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் எனும் 75-ம் ஆண்டு சுதந்திரா விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கைதிகளுக்கு தண்டனை ரத்து செய்யப்படவில்லை என குஜராத் அரசு தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் இழைக்கப்பட்ட குற்றம் "கொடூரமானது, பாரதூரமானது மற்றும் தீவிரமானது" என்றும் "பாதிக்கப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே குற்றம் இழைக்கப்பட்டது" என்றும் கூறி, குற்றவாளிகளை விடுவிக்க கூடாது என சிபிஐ மற்றும் சிபிஐ நீதிமன்றங்களில் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், நன்னடத்தை காரணமாக குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர்.