Bihar: மனைவியை கொன்றதாக சிறையில் கணவன்! சத்தமில்லாமல் காதலனோடு வாழ்ந்த மனைவி! பீகாரில் பகீர் சம்பவம்!
தன் மகளுக்கும் தினேஷ் ராம் என்பவருக்கும் 2016, ஏப்ரல் 19 ஆம் தேதி திருமணமானது என்று குறிப்பிட்ட அவர், கடந்த ஆண்டு தனது மகளை சீதனம் கேட்டு கொடுமை படுத்தியதாக கூறினார்.
பீகாரில் ஒரு முக்கோணக் காதல் ஏற்படுத்திய வித்யாசமான சம்பவம் அரங்கேறி உள்ளது. கணவரால் சீதனம் கேட்டு சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்பட்ட பெண் பஞ்சாப்பில் தனது காதலருடன் இல்வாழ்க்கை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
பீகார் மாநிலம் மோதிஹரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் என்ற இடத்தை சேர்ந்தவர் தினேஷ் ராம். இவர் சாந்தி தேவி என்ற பெண்ணை கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிய நிலையில் திடீரென சாந்திதேவி கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இந்த நிலையில் சாந்தி தேவியின் தந்தை யோகேந்திர யாதவ் தனது மகளை அவரின் வீட்டிற்கு பார்க்க சென்றுள்ளார். அவர் அங்கு இல்லை என்பதை அறிந்ததும் அதிர்ச்சி ஆன அவர், தனது மருமகன் தினேஷ் ராம் மீது போலீஸில் புகார் செய்தார். தன் மகளுக்கும் தினேஷ் ராம் என்பவருக்கும் 2016, ஏப்ரல் 19 ஆம் தேதி திருமணமானது என்று குறிப்பிட்ட அவர், கடந்த ஆண்டு தனது மகளை சீதனம் கேட்டு கொடுமை படுத்தியதாக கூறினார்.
சீதனமாக மோட்டார் பைக் மற்றும் 50 ஆயிரம் பணம் கேட்டு தினேஷ் ராம் தனது மகளை சித்ரவதை செய்ததாக புகாரில் குறிப்பிட்டு இருந்தார். தற்போது வீட்டிற்கு சென்று பார்த்தால் என் மகள் அங்கு இல்லை, தினேஷ் ராம் தங்களது மகளை கொலை செய்து விட்டார் என்று போலீஸில் புகார் அளித்திருந்தார். புகாரை ஏற்ற காவல்துறை அதிகாரிகள், உடனே போலீஸார் தினேஷ் ராமை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, சாந்திதேவி இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் சாந்தியின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. உடலை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கில், போலீஸார் சாந்தி தேவி பயன்படுத்திய மொபைல் போன் எங்கு இருக்கிறது என்பதை கண்காணிக்க ஆரம்பித்தனர்.
அந்த மொபைல் சிக்னல் பஞ்சாப்பின் ஜலந்தரில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் ஜலந்தருக்கு விரைந்து சென்றது. அங்கு தீவிர தேடுதலுக்கு பிறகு சாந்தி தேவி இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. சாந்தி இறக்கவில்லை என்று தெரிந்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர் தனது காதலனுடன் ஜலந்தரில் வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டதும், அவரை போலீஸார் பீகாருக்கு அழைத்து வந்தனர். தற்போது சாந்தியின் கணவர் தினேஷ் சிறையில் இருந்து விடுக்கப்பட்டுள்ளார். சாந்தி தேவியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி சாந்தி தேவியின் தந்தை அளித்த புகாரின் உண்மைத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பி வருகிறார்கள் காவல் துறையினர்.