இந்தியன் 2 படத்தில் வருவது போன்று யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. மாணவர் மரணம்!
பீகாரில் யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவரால் 15 வயது சிறுவன் உயிரிழந்தார்.
பீகார் மாநிலத்தில் போலி மருத்துவர் ஒருவர், யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக, 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலி மருத்துவரால் சிறுவன் உயிரிழப்பு:
ஷங்கர் இயக்கத்தில் கமலின் இந்தியன் 2 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த திரைப்படத்தில், யூடியூப் பார்த்து போலி மருத்துவர் அறுவை சிகிச்சை செய்யும் காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவம், தற்போது நிஜமாகியுள்ளது.
சரண் மாவட்டத்தில் போலி மருத்துவர் ஒருவர், யூடியூப் வீடியோக்களை பார்த்து அறுவை சிகிச்சை செய்து பித்தப்பையில் இருந்து கல்லை அகற்றினார். ஆனால், சிகிச்சை செய்யப்பட்ட சிறுவனின் உடல்நிலை மோசமடைந்தது.
இதையடுத்து, மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, செல்லும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டான். போலி மருத்துவருடன் இருந்த மற்றவர்களும் உடலை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பீகாரில் பரபரப்பு சம்பவம்:
இறந்த சிறுவன் கிருஷ்ண குமாரின் தந்தை, இதுகுறித்து பேசுகையில், "பலமுறை வாந்தி எடுத்த சிறுவனை சரண் நகரில் உள்ள கணபதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
உடனடியாக வாந்தி நின்றுவிட்டது. ஆனால், மருத்துவர் அஜித்குமார் பூரி அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார். அவர் யூடியூப்பில் வீடியோக்களைப் பார்த்து அறுவை சிகிச்சை செய்தார். பின்னர் என் மகன் இறந்தார்" என்றார்.
இதுகுறித்து கிருஷ்ண குமாரின் தாத்தா கூறுகையில், "வாந்தி நின்ற பிறகு சிறுவன் நன்றாக இருந்தான். ஆனால், ஒரு வேலையாக தந்தையை வெளியே அனுப்பிவிட்டு, குடும்பத்தின் சம்மதம் இல்லாமல் பையனுக்கு போலி மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பித்தார்.
பையன் வலியில் இருந்தான். ஏன் வலிக்கிறது என்று டாக்டரிடம் கேட்டபோது, அவர் எங்களைப் பார்த்து, நீங்கள் மருத்துவரா? நான் மருத்துவரா என கேட்டார். பின்னர், மாலையில், சிறுவன் மூச்சு விடுவதை நிறுத்தினான். வழியிலேயே இறந்துவிட்டான்" என்றார்.
இதுகுறித்து, போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கணபதி சேவா சதனின் போலி மருத்துவர் மற்றும் பிற ஊழியர்களைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.