Crime : வன்கொடுமை செய்ய முயன்ற கும்பல்.. ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பெண்.. பதைபதைக்கவைக்கும் சம்பவம்..
இந்துயாவில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பது மீண்டும் ஒரு சம்பவத்தின் மூலம் விவாதமாகியுள்ளது
பாலியல் வன்கொடுமையில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள 30 வயது பெண் ஒருவர் ஓடும் பேருந்தில் இருந்து குதித்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
ஓடும் பேருந்தில் வன்கொடுமை முயற்சி
நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதுவும் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது இந்தியாவில் இது முதன்முறை அல்ல. டெல்லி நிர்பயா வழக்கில் தொடங்கி பல முறை பேருந்தில் தனியே செல்லும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதே போல கடந்த புதன்கிழமை அதிகாலை பேருந்தில் சென்ற பெண்ணை பூர்ணியாவில் சில நபர்கள் துன்புறுத்த வந்துள்ளனர். அதிலிருந்து தப்பிக்க பேருந்தில் இருந்து குதித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி இந்துயாவில் மீண்டும் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.
யதார்த்தமாக பார்த்த ரோந்து குழுவினர்
காயமடைந்த நேபாள மொழி பேசும் பெண் NH-31 சாலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டறிந்த ஒரு போலீஸ் ரோந்துக் குழு அவரை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. தல்கோலா காவல் நிலையத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் அதிகாலை 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் வைஷாலியில் இருந்து சிலிகுரிக்கு அந்தப் பெண் சென்று கொண்டிருந்த போது நள்ளிரவில் பேருந்து பூர்ணியாவை அடைந்தபோது, நான்கு பேர் அதில் ஏறியுள்ளனர்.
பேருந்தின் ஜன்னல் வழி குதித்துள்ளார்
அவர்கள் அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டு பாலியல் துன்புறுத்தல் செய்ய துவங்கி உள்ளனர். அந்த பெண் பயந்து பேருந்தின் ஜன்னலில் வழி குதித்ததாக பூர்னியா எஸ்பி அமீர் ஜவைத் கூறினார். "நாங்கள் அனைத்து கோணங்களிலும் வழக்கை விசாரித்து, பேருந்தை கண்காணிக்க முயற்சிக்கிறோம். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் டார்ஜிலிங்கில் வசிப்பவர் மற்றும் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஜனவரி 22 அன்று ஏதோ வேலைக்காக வைஷாலிக்கு சென்றதாக அந்த பெண் போலீசாரிடம் கூறினார்” என்று எஸ்பி ஜவைத் தொலைபேசியில் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
காவல்துறை எஸ்பி பேட்டி
“அந்த பெண் மதியம் 2.30 மணிக்கு வைஷாலியிலிருந்து சிலிகுரிக்கு பேருந்தில் ஏறியுள்ளார். அவரை துன்புருத்திய நான்கு பேரும் பூர்ணியாவில் பேருந்தில் ஏறினர். அந்த பெண் அவர்களின் நடத்தை பிடிக்காமல் என்று ஓடும் பேருந்தின் ஜன்னல் வழியாக குதித்தார்", அவர் எஸ்பி மேலும் கூறினார். விஜய் குமார் யாதவ் தலைமையிலான போலீஸ் ரோந்துக் குழுவினர், மயங்கிய நிலையில் இருந்த பெண்ணைக் கண்டு, பைசி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காவல்துறையின் கூற்றுப்படி, அந்தப் பெண் சுமாராகவே இந்தி பேசுகிறார், ஆனால் நேபாளியில் சரளமாக பேசுகிறார் என்று தெரிய வந்துள்ளது.