வங்கியில் தவறாக அனுப்பிய பணம்: பிரதமர் மோடி அனுப்பியதாக திருப்பித்தர மறுக்கும் நபர்!
பீகாரின் காகரியா மாவட்டத்தில் வங்கியின் தவறால் தனது கணக்கில் செலுத்தப்பட்ட 5 லட்ச ரூபாயைத் திருப்பி தர மறுத்துள்ளதோடு, அந்தப் பணம் பிரதமர் நரேந்திர மோடியால் தனக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
பீகார் மாநிலம் காகரியா மாவட்டத்தில் வங்கியின் தவறால் தனது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 5 லட்ச ரூபாயைத் திருப்பி தர மறுத்துள்ளதோடு, அந்தப் பணம் பிரதமர் நரேந்திர மோடியால் தனக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறி மிரள வைத்துள்ளார்.
பீகார் மாநிலம் காகரியா மாவட்டத்தில் கிராமின் வங்கி செயல்பட்டு வருகிறது. கிராமப் புறத்தில் செயல்பட்டு வரும் இந்த வங்கி, அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்குப் பயன் தரும் வகையில் கட்டப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், இந்த வங்கியில் இருந்து பணப் பரிவர்த்தனை ஒன்றின் போது, அருகில் உள்ள பக்தியார்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் தாஸ் என்பவரின் வங்கிக் கணக்கிற்கு, 5.5 லட்சம் ரூபாய் பணம் தவறுதலாகச் சென்றுள்ளது. இதனையடுத்து, வங்கி அலுவலர்கள் பக்தியார்பூர் எல்லைக்கு உட்பட்ட மான்சி காவல் நிலையத்தில் புகார் அளித்து, ரஞ்சித் தாஸிடம் இருந்து 5.5 லட்சம் ரூபாய் பணத்தை மீட்டுத் தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனினும், பல முறை கோரிக்கை விடுத்தும், ரஞ்சித் தாஸ் பணத்தைத் திரும்ப அளிப்பதற்கு மறுத்துள்ளதோடு, முழுத் தொகையையும் செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
`கடந்த மார்ச் மாதம் எனது வங்கிக் கணக்கில் 5.5 லட்சம் ரூபாய் பணம் வந்தடைந்த போது நான் மிகவும் மகிழ்ந்தேன். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் பணம் அனுப்புதாக வாக்குறுதி கொடுத்துள்ளார் என நான் நம்புகிறேன். அதனால் இந்தப் பணம் எனக்கு கிடைத்த போது, பிரதமர் மோடி எனக்கு அனுப்பிய முதல் தவணை இது என நான் எண்ணி, முழுத் தொகையையும் செலவு செய்துவிட்டேன். இப்போது என்னிடம் எனது கையிலோ, வங்கிக் கணக்கிலோ எந்தப் பணமும் இல்லை’ எனக் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார் ரஞ்சித் தாஸ். இவர் மான்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு, சத்திஸ்கர் மாநிலம் காங்கர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, `இந்தியாவின் ஊழல் அரசியல்வாதிகள் தங்கள் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் சேமித்துள்ளனர் என உலகமே அறியும். எனது அருமை காங்கர் சகோதர, சகோதரிகளே! இந்தப் பணம் நமக்கு வந்து சேர வேண்டும் அல்லவா? வெளிநாடுகளில் இருக்கும் இந்தப் பணத்தை நாம் எடுத்து வந்தால், ஒவ்வொரு ஏழை இந்தியனுக்கும் சுமார் 15 முதல் 20 லட்சம் வரை பணம் கிடைக்கும். அங்கு அவ்வளவு பணம் இருக்கிறது’ என்று கூறியிருந்தது, பலராலும் பிரதமர் மோடி அனைவருக்கும் 15 லட்சம் ரூபாய் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவார் எனப் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து மான்சி காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி தீபக் குமார், `வங்கி மேலாளர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் ரஞ்சித் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்தகட்ட விசாரணைகள் நடைபெற்று வருகின்றன’ எனக் கூறியுள்ளார்.