10ஆவது முறையாக முதலமைச்சர்… நீண்ட கால பதவியை தக்கவைக்கும் நிதிஷ் குமார்!
2010 தேர்தலில் நிதிஷ் குமார் கட்சி 115 இடங்களை கைப்பற்ற, பாஜக 81 இடங்களையும், ஆர்ஜேடி 22 இடங்களையும் வென்றது.

2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல்முறையாக நிதிஷ்குமார் முதலமைச்சரானார். ஆனால், போதிய எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லாததால், ஒரே வாரத்தில் அவரது ஆட்சி பறிபோனது.
பிஹார் சட்டப்பேரவையில் உள்ள 243 தொகுதிகளுக்கான தேர்தல், கடந்த நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. பாஜக, ஜேடியூ கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) மற்றும் காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணி இடையே நேரடிப் போட்டி இருந்தது. இண்டி கூட்டணி மகாகத் பந்தன் (மகா கூட்டணி) என்றும் அழைக்கப்பட்டது. பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி, ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டன. இதில், மொத்தமாக 66.91 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.
இதில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இண்டி கூட்டணி 40-க்கும் குறைவான தொகுதிகளுக்குச் சுருங்கிவிட்டது. இந்த நிலையில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்க உள்ள நிலையில், நிதிஷே முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னணி என்ன?
2005ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் நிதிஷ்குமார் மற்றும் பாஜக முறையே 88 மற்றும் 55 தொகுதிகளை கைப்பற்றின. லாலு பிரசாத் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால், கூட்டணி ஆட்சியில் நிதிஷ்குமார் முதல்முறையாக பீகார் மாநில முதலமைச்சரானார்.
நடந்த தேர்தல்
2010 தேர்தலில் நிதிஷ் குமார் கட்சி 115 இடங்களை கைப்பற்ற, பாஜக 81 இடங்களையும், ஆர்ஜேடி 22 இடங்களையும் வென்றது. தொடர்ந்து 2015 தேர்தலில் ஆர்ஜேடிக்கு 80 இடங்களும், ஜேடியுவுக்கு 71 இடங்களும் கிடைத்தன. பாஜக 53 இடங்களுக்குத் தள்ளப்பட்டது. நிதிஷ் மீண்டும் முதலமைச்சர் ஆனார்.
2017ம் ஆண்டு ஊழலைக் காரணமாகச் சொல்லி, ஆர்ஜேடி கூட்டணியில் இருந்து வெளியேறி, மீண்டும் பாஜக உடன் இணைந்து ஆட்சி அமைத்தார். 2022-ல் தனது கட்சியை பாஜக உடைக்க முயற்சி செய்கிறது என்று கூறி பாஜகவில் இருந்து வெளியேறி ஆர்ஜேடி உடன் ஆட்சி அமைத்தார். 2024ஆம் ஆண்டு மீண்டும் பாஜக உடன் ஜோடி சேர்ந்தார் நிதிஷ் குமார்.
10ஆவது முறை
தற்போது 2025ஆம் ஆண்டு பாஜகவுடன் இணைந்து களத்தை எதிர்கொண்ட நிதிஷ், இமாலய வெற்றியை அடைந்திருக்கிறார். இதனால் 10ஆவது முறையாக நிதிஷ் ஆட்சிக் கட்டிலில் அமர்வாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






















