Gaya Deputy Mayor: பீகாரில் துணை மேயரான தூய்மை பணியாளர்...! சமூக நீதியில் புதிய மைல்கல்..!
கடந்த 40 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த பெண், கயா துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பீகார் தேர்தல்:
பீகாரில் நகராட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதலில், அக்டோபர் 10, 20 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், நகராட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது சட்டவிரோதம் எனக் கூறி, பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால், நகராட்சி தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, முதற்கட்ட தேர்தல் டிசம்பர் 18ஆம் தேதியும் இரண்டாம் கட்ட தேர்தல் 28ஆம் தேதியும் நடத்தப்பட்டது. முதற்கட்ட தேர்தலுக்கான முடிவுகள் டிசம்பர் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.
துணை மேயர்:
பீகாரில் முதல்முறையாக மேயர் மற்றும் துணை மேயர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, வார்டு கவுன்சிலர் வாக்களிக்க மேயர் மற்றும் துணை மேயர் தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.
பாட்னா மாநகராட்சி தேர்தலில் சீதா சாஹு மீண்டும் மேயர் பதவிக்கு வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 51,484 வாக்குகள் பெற்று தனது போட்டியாளரான மஜ்சாபியை 18,529 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். துணை மேயர் பதவிக்கு ரேஷாமி சந்திரவன்ஷி வெற்றி பெற்றுள்ளார். அவர் அஞ்சனா காந்தியை 5,251 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
துணை மேயரான தூய்மை பணியாளர்:
அதேபோல, கயா முனிசிபல் கார்ப்பரேஷன் புதிய வரலாறு படைத்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த பெண், கயா துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை மேயராக சிந்தாதேவி தேர்வு செய்யப்பட்டிருப்பதன் மூலம் அனைவருக்கும் அவர் முன்னுதாரணமாக மாறியுள்ளார்.
இதுகுறித்து கயா மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள கணேஷ் பேசுகையில், "கயா என்பது மக்கள் ஞானம் தேடும் இடம். முசாஹர் சமூகத்தை சேர்ந்த பெண்ணை மக்களவைக்கு அனுப்பிய தொகுதி. இங்கு கழிவறைகள் குறைவாக இருந்தபோது மனித மலத்தை தலையில் சுமந்து வந்த சிந்தாதேவியை மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்ததன் மூலம் இம்முறை இங்குள்ளவர்கள் உலகிற்கு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளனர். இது வரலாறு" என்றார்.
காய்கறி விற்பனை:
ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சமூகத்தை சேர்ந்தவர்களை மக்கள் பிரதிநிதியாக கயா தேர்வு செய்வது இது முதல்முறை அல்ல. சிந்தாதி தேவி, மிகவும் ஒடுக்கப்பட்ட முசாஹர் சமூகத்தைச் சேர்ந்த பெண். கல் உடைக்கும் தொழிலாளியான இவர், 1996 ஆம் ஆண்டு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியிலிருந்து கயா மக்களவை தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
துப்புரவுப் பணியாளரான சிந்தா தேவி காய்கறிகளையும் விற்பனை செய்து வந்துள்ளார். முன்னாள் துணை மேயர் மோகன் ஸ்ரீவஸ்தவாவும் சிந்தா தேவிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
"தேர்தலில் வெற்றி பெற்று சிந்தா தேவி வரலாறு படைத்துள்ளார். நகர மக்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவரை ஆதரித்து, அவர்களை சமூகத்தில் முன்னோக்கி கொண்டு செல்ல பாடுபடுகிறார்கள்" என அவர் கூறியுள்ளார்.