’’பீஹார்ல ஜெயிச்சாச்சு.. இனி அடுத்த டார்கெட் இவங்கதான்’’.. பாஜக சொன்னது யாரை தெரியுமா?
Bihar Election 2025 Result: பிஹார் முதல் நாளில் இருந்தே குழப்பம், ஊழல் அல்லது கொள்ளை அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளாது என்று முடிவெடுத்து இருந்தது, தற்போது தெளிவாகி உள்ளது- பாஜக.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் என்டிஏ கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், பாஜக இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளது.
எகிறிய என்டிஏ கூட்டணியின் தாக்கம்
நவம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற பிஹார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குகள் இன்று (நவம்பர் 14) எண்ணப்பட்டு வருகின்றன. இதில் என்டிஏ கூட்டணியில் உள்ள பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் அபார முன்னிலை வகித்து வருகின்றன.
அதேநேரத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் கங்கிரஸ் கட்சிகளும் கடும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பிஹார் இளைஞர்கள் புத்திசாலிகள்
அதுகுறித்து அவர் தெரிவித்துக்கும்போது, "அராஜக அரசாங்கம் அமைக்கப்படக் கூடாது என்று பிஹார் முடிவு எடுத்துவிட்டது. பிஹார் இளைஞர்கள் புத்திசாலிகள். இது வளர்ச்சிக்கான வெற்றி ஆகும். நாங்கள் பிஹாரில் வெற்றி பெற்றுள்ளோம். இனி மேற்கு வங்கத்தின் முறை ஆகும்.
பிஹார் முதல் நாளில் இருந்தே குழப்பம், ஊழல் அல்லது கொள்ளை அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளாது என்று முடிவெடுத்து இருந்தது, தற்போது தெளிவாகி உள்ளது.
நீதியையும் வளர்ச்சியையும் தேர்வு செய்துள்ளனர்
மக்கள் அமைதியையும் நீதியையும் வளர்ச்சியையும் தேர்வு செய்துள்ளனர். இந்தக் கால இளைஞர்கள், முந்தைய மோசமான நாட்களைக் காணாவிட்டாலும், அவர்களின் முன்னோர்கள் பார்த்தார்கள். அப்போது அராஜகம் அதிகமாக இருந்தது" என்று பாஜக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
பிஹார் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி, என்டிஏ கூட்டணி 189 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணி பின்னடைவைச் சந்தித்து வருகிறது. வெறும் 50 தொகுதிகளிலேயே முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.






















