`சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்!’ - பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அதிரடி!
பீகார் மாநில முதல்வர் நித்திஷ் குமார் இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, பீகார் மாநிலத்தில் அனைத்து சாதியினரின் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
பீகார் மாநில முதல்வர் நித்திஷ் குமார் இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, பீகார் மாநிலத்தில் அனைத்து சாதியினரின் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கு முன்பாக அனைத்து கட்சியினரிடமும் கருத்து கேட்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பீகார் மாநில முதல்வர் நித்திஷ் குமார், `பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அனைவரின் கருத்துகளையும், அனுபவங்களையும் கேட்டுப் பெற அனைத்து கட்சியினரின் கூட்டம் நடத்தப்படும். இதனால் அனைவருக்கும் பலன் கிடைக்கும்’ என்று கூறியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்து பேசிய பீகார் முதல்வர் நித்திஷ் குமார், சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வதன் மூலம் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் வளர்ச்சிக்காக அரசு பணியாற்றுவது எளிமையாக்கப்படும் என்றும் பீகார் முதல்வர் நித்திஷ் குமார் கூறியுள்ளார்.
`இந்தப் பணிகளை விரைவில் தொடங்குவதோடு, அது முறையாக செயல்படுகிறதா என்பதையும் உறுதி செய்வோம். சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்தவுடன், அரசு மேலும் வளர்ச்சிக்காக பாடுபடும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் புதுடெல்லியில் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை நித்திஷ் குமார் சந்தித்தது குறித்து, பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணையத் திட்டமிட்டுள்ளார் என்று கேட்க, அதற்குப் பதிலளித்த பீகார் முதல்வர் நித்திஷ் குமார் பிரசாந்த் கிஷோரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்ததாகவும், அதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
`பிரசாந்த் கிஷோருடனான எனது உறவு புதியதா? எனது உடல்நிலை சரியாக இல்லாத போது, அவர் என்னை அழைத்துப் பேசினார். நான் டெல்லி சென்ற போது, அவரைச் சந்தித்தேன். இதில் அரசியல் எதுவும் இல்லை; இது தனிப்பட்ட சந்திப்பு தான்’ என்று பீகார் முதல்வர் நித்திஷ் குமார் கூறியுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு, சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாகக் கூறப்பட்டு, ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டார். நீக்கப்பட்ட போது, பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவராக இருந்ததோடு, முதல்வர் நித்திஷ் குமாருக்கு நெருக்கமானவராகவும் கருதப்பட்டார்.
2015ஆம் ஆண்டு பீகார் மாநிலத் தேர்தல்களின் போது, ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டணியுடன் பணியாற்றினார் பிரசாந்த் கிஷோர். இந்தக் கூட்டணியில் அங்கம் வகித்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் ஒரே ஆண்டில் மோதல் ஏற்பட்டு, கூட்டணி உடைந்தது குறிப்பிடத்தக்கது. பிரசாந்த் கிஷோரின் ஐபேக் என்ற தேர்தல் வியூக நிறுவனம் கடந்த ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளுக்காகப் பணியாற்றியது.