Anant Kumar Singh: ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சி.. ஜெயிலில் இருந்த ஜெயித்த பீகார் எம்.எல்.ஏ!
ஆனந்த் குமார் சிங் தேர்தல் பரப்புரையின்போது பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர் பிரியதர்ஷி பியுஷை ஆதரித்து வாக்கு கேட்ட துலர் சந்த் யாதவை சுட்டுக் கொன்றார்.

பீகார் சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளரான ஆனந்த் குமார் சிங் சிறையில் இருந்த நிலையில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முடிவுக்கு வந்த பரபரப்பு
243 தொகுதிகளைக் கொண்ட பீகாருக்கு கடந்த நவம்பர் 4 மற்றும் 11 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 2026ஆம் ஆண்டு 5 மாநில தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த பீகார் தேர்தல் அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வாக்கு திருட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் பீகார் சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான வாக்குப்பதிவு சதவிகிதம் இருந்தது. குறிப்பாக பெண்கள் அதிகளவில் வாக்களித்தனர்.
இந்த நிலையில் பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிகை நவம்பர் 14ம் தேதியான நேற்று நடைபெற்றது. இதில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. குறிப்பாக 101 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக அதிகப்பட்சமாக 89 தொகுதிகளில் வென்றது. ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
சிறையில் இருந்தே வெற்றி
இந்த நிலையில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளரான ஆனந்த் குமார் சிங் மொகாமா தொகுதியில் சுமார் 28,206 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். அவர் மொத்தமாக 91,416 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளரான வீணா தேவி 63,210 வாக்குகள் பெற்றார்.
கடந்த நவம்பர் 2ம் தேதி கொலை வழக்கில் ஆனந்த் குமார் சிங் கைது செய்யப்பட்டார். அவர் தேர்தல் பரப்புரையின்போது பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர் பிரியதர்ஷி பியுஷை ஆதரித்து வாக்கு கேட்ட துலர் சந்த் யாதவை சுட்டுக் கொன்றார். போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் ஆனந்த் குமார் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
ஆனந்த் குமார் சிங் இதற்கு முன்பாக 2005, 2010ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் சார்பிலும், 2015ல் சுயேட்சையாகவும், 2020ல் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பாகவும் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளார். பீகார் மாநிலத்தின் பூமிஹார் சாதியினரின் வாக்கு வங்கியாக இவர் பார்க்கப்படுகிறது.
2000ம் ஆண்டின் முற்பகுதியில் ஐக்கிய ஜனதா தளத்தில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய ஆனந்த் குமார் சிங் 2022 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். 2024 ஆம் ஆண்டு அந்த வழக்கில் இருந்து மாநில உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் சிறை தண்டனை பெற்றதால் சட்டமன்ற உறுப்பினராக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இடைத்தேர்தலில் அவரின் மனைவி நீலம் தேவி ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து வெற்றி பெற்றார்.






















