Train Accidents: இந்தியா எதிர்கொண்ட மிகவும் மோசமான ரயில் விபத்துகள் குறித்த விபரங்கள் தெரியுமா?
Train Accidents: இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற மிகவும் மோசமான ரயில் விபத்துகளை இந்த தொகுப்பில் காணலாம்.
Coromandel Express Accident : சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் இருந்து இன்று மதியம் 3:20 மணிக்கு புறப்பட்ட ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, சரக்கு ரயிலுடன் மோதியதால் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்தது எப்படி?
இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து தகவல் வெளியிட்டுள்ள ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா, "இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன. சிறிது நேரம் கழித்து, யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன" என்றார்.
இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்துகள் இங்கே:
- 7 ஜூலை 2011 அன்று, உத்தரபிரதேசத்தில் எட்டா மாவட்டம் அருகே சாப்ரா-மதுரா எக்ஸ்பிரஸ் பேருந்து மீது மோதியது. 69 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர். நள்ளிரவு 1.55 மணியளவில் ஆளில்லா நேரத்தில் இந்த விபத்து நடந்தது. அதிவேகமாக வந்த ரயில் பேருந்தில் மோதியதில் சுமார் அரை கிலோமீட்டர் வரை பேருந்தை இழுத்துச் சென்றது.
- இந்திய இரயில்வே வரலாற்றில் 2012ஆம் ஆண்டு மிக மோசமான ரயில் விபத்துக்ளை எதிர்கொண்ட ஆண்டாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் சுமார் 14 விபத்துக்கள் பதிவாகியுள்ளன, இதில் தடம் புரண்டது மற்றும் நேருக்கு நேர் மோதியது ஆகிய இரண்டும் அடங்கும்.
- 30 ஜூலை 2012 அன்று, டெல்லி-சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூர் அருகே தீப்பிடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- மார்ச் 20, 2015 அன்று டேராடூனில் இருந்து வாரணாசிக்கு சென்று கொண்டிருந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெரிய விபத்து நடந்தது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலியில் உள்ள பச்ரவான் ரயில் நிலையம் அருகே ரயிலின் என்ஜின் மற்றும் இரண்டு அடுத்தடுத்த பெட்டிகள் தடம் புரண்டதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 150 பேர் காயமடைந்தனர்.
- 19 ஆகஸ்ட் 2017 அன்று, ஹரித்வார் மற்றும் பூரி இடையே இயங்கும் கலிங்கா உட்கல் எக்ஸ்பிரஸ் உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள கட்டௌலி அருகே விபத்துக்குள்ளானது. ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டதில் 21 பயணிகள் உயிரிழந்தனர், 97 பேர் காயமடைந்தனர் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.
- இதே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், 2009ஆம் ஆண்டிலும் ஒடிசாவில் விபத்துக்குள்ளானது. அதில், 161 பேர் படுகாயமடைந்த நிலையில், 16 பேர் உயிரிழந்தனர்.