Bharat Joda Yatra: ராகுல்காந்தி நடைபயணத்திற்கு தடையா..? மத்திய அரசு கடிதத்தில் கூறியிருப்பது என்ன..?
கொரோனா நடைமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால் தேசநலனை கருதி நடைபயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார் ராகுல் காந்தி.
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை கடந்து தற்போது ஹரியானாவை எட்டி உள்ளது. அடுத்தபடியாக, நடைபயணம் நாளை டெல்லியை சென்றடைய உள்ளது.
இதற்கிடையே, சீனாவில் கொரோனா எண்ணிக்கை மீண்டும் உச்சத்தை எட்ட தொடங்கியுள்ளது. அங்குள்ள, மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் நிரம்பி வழிகின்றனர் என தகவல் வெளியான வண்ணம் இருக்கிறது.
அதேபோல, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக, இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கொரோனா நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா நடைமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால் தேசநலனை கருதி நடைபயணத்தை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நடைபயணத்தில் முகக்கவசங்கள், சானிடைசர்கள் ஆகியவற்றை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே நடைபயணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குஜராத் தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட பிரதமர் மோடியின் பொதுக்கூட்டங்களில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, கொரோனா நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்தியாவில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மரபணு மாதிரிகளை பகுப்பாய்வு செய்யப்படுவது அதிகரிக்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் தெரிவித்திருந்தார்.
மேலும், கொரோனா பாதிப்பு குறித்து, இந்தியாவில் மேற்கொள்ளும் நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில், அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.