மெட்ரோவில் இப்படி ஒரு கேவலமான சம்பவமா? - பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!
அன்றைய தினம் இளம்பெண் ஒருவர் பயணம் செய்திருக்கிறார். அரெகரேவைச் சேர்ந்த அந்த பெண் இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மெட்ரோவில் பயணம் செய்த பெண்ணிடம் ஆண் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஹை-டெக் நகரங்களில் ஒன்றாக அறியப்படும் பெங்களூருவில் பல மாநிலங்களைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் பணியாற்றி வருகின்றனர். பல்வேறு வசதிகளை கொண்ட பெங்களூரு நகரில் மெட்ரோ ரயில்கள் மக்களின் பயணத்திற்கு சிறப்பான பங்களிப்பை கொடுக்கின்றன. இப்படியான மெட்ரோ ரயிலில் கடந்த டிசம்பர் 23ம் தேதி மோசமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
அன்றைய தினம் இளம்பெண் ஒருவர் பயணம் செய்திருக்கிறார். அரெகரேவைச் சேர்ந்த அந்த பெண் இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மெஜஸ்டிக் சந்திப்பில் இருக்கும் மெட்ரோ ரயிலில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. 25 வயதான அந்த பெண் வேலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.
அந்த பெண் வீடியோவில், “அப்போது 15 நிமிடங்கள் கொண்ட அந்த பயணத்தில் தான் இரண்டு ஆண்கள் இடையே அமர்ந்திருந்தேன். ஆரம்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் என்னுடைய பயணம் தொடங்கியது. நான் மிகவும் சௌகரியமான நிலையை உணர்ந்தேன். அங்கிருந்த அனைவரும் செல்போனில் மூழ்கியிருந்தார்கள்.
அடுத்த சந்திப்பில் அருகில் அமர்ந்திருந்த நபர் இறங்கி விட, காலியாக இருந்த அந்த இருக்கையில் மற்றொருவர் வந்து அமர்ந்தார். அவ்வளவு தான்! நிலைமை தலைகீழாக மாறிப் போனது. அந்த 2 ஆண்களுக்கு நடுவில் நான் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டேன். புதிதாக வந்த நபரால் தான் இப்படி ஒரு பிரச்னை என்பதை உணர்ந்தேன். அவர் எனக்கு மிகவும் நெருக்கமாக அமர்ந்திருந்தார். சரி கூட்ட நெரிசல் காரணமாக அவசரமாக இடத்தை பிடிக்கும் பொருட்டு இப்படி நடந்திருக்கலாம் என சாதாரணமாக விட்டு விட்டேன்.
ஆனால் மெட்ரோ ரயில் செல்ல செல்ல அந்த நபர் என்னை தகாத முறையில் தொடத் தொடங்கினார். முதலில் ஏதோ ஒரு கை என் பக்கம் வருவதை உணர முடிந்தது. எனினும் அதனை நான் தற்செயலாக தெரியாமல் நடந்து விட்டதாக நினைத்து என்னை நானே சமாதானம் செய்துக் கொண்டேன். ஆனால் என் அருகில் புதிதாக வந்து அமர்ந்த அந்த நபர் எனது காலை காலை அழுத்தியபோது அவர் தவறாக நடந்து கொள்கிறார் என்பது புரிந்தது. நான் உடனடியாக அவரிடம் உங்கள் காலை வைத்து என்னை இடிக்கிறீர்கள், தயவு செய்து நகர்ந்துங்கள் என சொன்னேன்.
ஆனால் அந்த நபர் நான் சொல்வதை காதில் கேட்காமல் மீண்டும் அப்படியே செய்தார். இது எதேச்சையாக நடந்தது அல்ல. வேண்டுமென்றே நடக்கிறது என்பதை நான் உணர்ந்தேன். அவன் என்னை தொட முயற்சிக்கிறான் என்பதை புரிந்துக் கொண்டேன். இதனால் எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. அதேசமயம் நான் இறங்க வேண்டிய மெட்ரோ ரயில் சந்திப்பு வரும் வரை காத்திருந்தேன். இப்படியே விட்டு சென்றால் அவர் மீண்டும் மற்றவர்களிடமும் இப்படித்தான் நடந்துக் கொள்வார் என எண்ணினேன். எனது நிறுத்தம் வந்ததும் நான் எழுந்து அவரை கன்னத்தில் அறைந்தேன். அந்த இடத்தை விட்டு நகர சொன்னேன்.
பின்னர் நான் ரயிலில் இருந்து இறங்கி விட்டேன். அந்த நபரும் அங்கேயே இறங்கினார். அப்போது நான் அவரை மீண்டும் அறைந்தேன். இதனால் அவர் முதலில் அழுதார். பின்பு கெஞ்சினார். அதனைத் தொடர்ந்து கன்னடத்தில் ஏதோ சொல்லி சிரித்துக் கொண்டார்.
இதனைப் பார்த்த அங்கிருந்த மெட்ரோ பாதுகாப்புப் பணியாளர்கள் தலையிட்டு இருவரையும் அழைத்துச் சென்றனர். என்னை போலீசில் புகாரளிக்க அறிவுறுத்தினர். எனினும் அந்த நபரின் வயது மற்றும் அவர் குடிபோதையில் இருந்தது எனக்கு பரிதாபத்தை ஏற்படுத்தியது. போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் பெலகாவியைச் சேர்ந்த முத்தப்பா என்பது தெரிய வந்தது. காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தும் கூட எச்சரிக்கை செய்து விடுமாறு பெண்ணின் பெற்றோர் கேட்டுக் கொண்டதால் முத்தப்பா விடுவிக்கப்பட்டார் என தெரிவித்துள்ளார்.





















