மனுசனா நீங்க எல்லாம்.. நடுரோட்டில் துடித்த கணவர்.. பரிதவித்த மனைவி.. பறிபோன உயிர்!
மனைவி அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் தனது கணவனை காப்பாற்றக்கோரி உதவி கேட்டார். அவர் உதவிக்காக கைகூப்பி நிற்கும் வீடியோ காட்சிகள் எந்த மாதிரியான சமூகத்தில் நாம் இருக்கிறோம் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சாலையில் தனது கணவர் மாரடைப்பால் உயிருக்கு போராடிய நிலையில் அவர் மனைவி உதவி கேட்டும் கிடைக்கவில்லை. இதனால் அநியாயமாக அந்த கணவரின் உயிர் பறிபோனது.
மாரடைப்பால் துடித்த கணவன்
கர்நாடகா மாநிலம் தெற்கு பெங்களூருவில் உள்ள பாலாஜி நகரில் வெங்கட் ரமணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். மெக்கானிக்காக பணியாற்றி வரும் அவருக்கு நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கடுமையான மார்பு வலி ஏற்பட்டது. முதலில் நெஞ்சு வலிப்பதாக உணர்ந்த அவர் தனது மனைவியிடம் கூறியுள்ளார். உடனடியாக மூச்சு திணறிய நிலையில் வெங்கட் ரமணன் சோர்வடைந்ததால் உடனடியாக அவர் மனைவி மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்தார்.
வேறு வழிகள் இல்லாத நிலையில் மருத்துவமனை செல்ல இருவரும் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளனர். அதனை மனைவி ஓட்ட பின்னால் வெங்கட் ரமணன் அமர்ந்திருந்தார். முதலில் அவர்கள் அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால் அங்கு அந்த நேரத்தில் பணியில் மருத்துவர்கள் இல்லை. இதனையடுத்து இருவரும் அருகில் இருந்த மற்றொரு மருத்துவமனைக்கு சென்றனர்.
உதவி கேட்டும் கிடைக்கவில்லை
அந்த மருத்துவமனை ஊழியர்கள் வெங்கட் ரமணனை பரிசோதனை செய்தனர். இதில் இசிஜி சோதனையில் அவருக்கு இலேசான மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிய வந்தது. ஆனால் அந்த மருத்துவமனை ஜெயநகரில் உள்ள ஸ்ரீ ஜெயதேவா இருதய அறிவியல் நிறுவனத்திற்கு உடனடியாக செல்ல அறிவுறுத்தினர். எனினும் ஒரு ஆம்புலன்ஸ் வசதி கூட ஏற்படுத்தி தரவில்லை. இதனால் வேறு வழியின்றி கணவன், மனைவி இருவரும் பைக்கில் புறப்பட விபத்து ஏற்பட்டது.
இதனால் வெங்கட் ரமணனின் மனைவி அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் தனது கணவனை காப்பாற்றக்கோரி உதவி கேட்டார். அவர் உதவிக்காக கைகூப்பி நிற்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியையும், எந்த மாதிரியான சமூகத்தில் நாம் இருக்கிறோம் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. அவர் உதவி நிராகரிக்கப்படும் போதெல்லாம் தனது கணவர் சுயநினைவுடன் இருக்கிறாரா என திரும்பி பார்க்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
உண்மையில் அந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒரு வழியாக கடைசியில் ஒரு டாக்ஸி ஓட்டுநர் வெங்கட் ரமணனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினார். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது குடும்பத்தினர் நிலை குலைந்தனர். அந்த துயரத்திலும் கூடவெங்கடரமணனின் கண்களை அவரது குடும்பத்தினர் தானம் செய்தனர்.
உயிரிழந்த வெங்கட் ரமணனுக்கு கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் மகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வெங்கட் ரமணன் உடன் பிறந்த அனைவரும் உயிரிழந்து விட்ட நிலையில், தற்போது அவரும் இல்லை என்பதால் அவரது தாய் மிகுந்த சோகத்தில் இருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.





















