பெங்களூர்: ஆசிரியர் கொடுத்த தண்டனை… உயிரிழந்த சிறுமி! வழக்கு பதிந்து போலீசார் விசாரணை!
சிறுமி வெள்ளிக்கிழமை பள்ளியில் சரிந்து விழுந்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் இறந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டதாக ஒரு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் கொடுத்த தண்டனையால் 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த 4 ஆம் வகுப்பு சிறுமியின் குடும்பத்தினர் குழந்தையின் இறப்புக்கு பள்ளி நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டி போலீசில் புகார் அளித்துள்ளனர்.
மாணவர்கள் மீது ஆசிரியர் தாக்குதல்கள்
பள்ளி மாணவ மாணவிகள் மீதான ஆசிரியர் தாக்குதல்கள் தொடர்பான சர்ச்சைகள் சமீப மாதங்களாகவே வெளியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. தலித் சிறுவன் பானையில் தண்ணீர் குடித்ததற்காக தாக்கப்பட்ட சம்பவம், தேர்வில் பிட் வைத்திருக்கிறாரா என்று அறிய மாணவியின் உடையை அகற்றிய அவலம் என ஆசிரியர்கள் அத்துமீறல்கள் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப் பட்டு வருகின்றன. ஆனாலும், இது போன்ற சம்பவங்கள் குறைந்ததாக இல்லை என்பதற்கு இந்த பெங்களூரு சம்பவமே சாட்சி. ஆசிரியர் கொடுத்த தண்டனையால் மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சரிந்து விழுந்த மாணவி
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தியில், சிறுமி வெள்ளிக்கிழமை பள்ளியில் சரிந்து விழுந்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் இறந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளி நிர்வாகம், பெற்றோருக்குத் தகவல் அளித்து, உடலைக் கொண்டு சென்றுள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக காத்திருப்பு
பெங்களூரு ராமச்சந்திரபுராவின் கோகோநட் கார்டனில் உள்ள ஆர்டி சர்வதேச பள்ளியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து, இறப்புக்கான சரியான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.
போலீசார் விசாரணை
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை புகாரில், தனது மகள் பள்ளியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துவிட்டதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார். பள்ளியில் தண்டனை வழங்கியதன் காரணமாகவே தமது மகள் உயிரிழந்திருக்கலாம் என சிறுமியின் பெற்றோர் சந்தேகிக்கின்றனர். எவ்வாறாயினும், சிறுமியை வைத்தியசாலையில் பரிசோதித்த போது, சிறுமியின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். சிசிடிவி காட்சிகளை பரிசோதனை செய்யவும், மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களிடம் விசாரணை நடத்தவும் போலீஸார் சனிக்கிழமை பள்ளிக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர். மேலும் மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் மாணவர்களைத் தண்டித்ததாகக் கூறப்படும்போது சிறுமி வகுப்பறையில் சரிந்து விழுந்ததாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.