ஒட்டும் இல்லை உறவும் இல்லை... சேர்ந்த 7 மாதத்தில் பாஜகவிலிருந்து விலகிய நடிகை!
பாஜகவுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்கிறேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிக்காக போராடினேன் - ஸ்ரபந்தி சட்டர்ஜி
வங்காள சினிமா உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஸ்ரபந்தி சட்டர்ஜி. இவர் ஏழு மாதங்களுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியில் மாநில தலைவர் திலீப் கோஷ் மற்றும் கைலாஷ் விஜயவர்கியா ஆகியோர் முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார். அக்கட்சிக்காக தீவிரமாக களமிறங்கிய ஸ்ரபந்திக்கு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு வழங்கியது பாஜக.
பெஹாலா பாஸ்சிம் தொகுதியில் போட்டியிட்ட அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரிடம் 50, 884 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனையடுத்து அவர் கட்சி நிகழ்வுகள் எதிலும் தலைகாட்டாமல் இருந்தார்.
இந்நிலையில் பாஜகவிலிருந்து விலகுவதாக ஸ்ரபந்தி சட்டர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “"பாஜகவுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்கிறேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிக்காக போராடினேன். ஆனால் மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்காக பா.ஜ.க எவ்விதமான முயற்சியும் எடுக்கவில்லை” என பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவார் எதிர்பார்க்கப்படுகிறது.
Severing all ties with the BJP, the party for which I fought the last state elections.Reason being their lack of initiative and sincerity to further the cause of Bengal...
— Srabanti (@srabantismile) November 11, 2021
இதுகுறித்து அவரிடம் ட்விட்டரில் ஒருவர் கேள்வி எழுப்புகையில், “காலம்தான் பதில் சொல்ல வேண்டும்” என ஸ்ரபந்தி கூறினார்.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலின்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பதற்காக நடிகர்கள் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்களை பாஜகவில் சேர்த்து தீவிரமாகப் பரப்புரை செய்தது. ஆனாலும் அந்தத் தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. இதன் மூலம் மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதலமைச்சராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
சூழல் இப்படி இருக்க பாஜகவில் சேர்ந்த நடிகர்கள் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் ஒவ்வொருவராக கட்சியிலிருந்து விலகி வருகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் பாஜகவில் இருந்து விலகியதாக நடிகைகள் ரூபா பட்டாச்சார்ஜி, அனிந்தியா பானர்ஜி ஆகியோர் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: ABP-CVoter Survey : சட்டசபை தேர்தல் 2022: உத்தரபிரதேசத்தில் சரியும் பா.ஜ.க. செல்வாக்கு....! அதிகரிக்கும் அகிலேஷ் யாதவின் ஆதிக்கம்...!