திரிணாமுல் காங்கிரஸ் தலைவரை கைது செய்ய போராட்டம்! மே.வங்கத்தில் 144 உத்தரவு - நடந்தது என்ன?
மேற்கு வங்கத்தில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரை கைது செய்ய கோரி பெண்கள் போராட்டம் முற்றியதை தொடர்ந்து 144 தடை விதிக்கப்பட்டுள்ளது
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி பகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கூட்டாளிகள் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பலரது நிலங்களை அபகரித்ததாகவும் கூறப்படுகிறது.
144 தடை:
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஷேக் ஷாஜகானை உடனடியாக கைது செய்ய கூறி, பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். அதனை தொடர்ந்து, சூழலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், அப்பகுதியில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதியில் இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கூட்டாளிகளால் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் பற்றிய புகாரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
வன்முறை:
திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவர் ஷேக் ஷாஜகான் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்ய உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்திய நிலையில், வெள்ளிக்கிழமை போராட்டம் வன்முறையாக வெடித்தது என்று செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்துள்ளது.
VIDEO | Violence erupts in Sandeshkhali in North 24 Parganas district of West Bengal. Protesters demand the arrest of TMC leader Shahjahan Sheikh in the alleged ration allotment scam. pic.twitter.com/ks5NC6VxrC
— Press Trust of India (@PTI_News) February 9, 2024
போராட்டத்தின்போது குச்சிகள் மற்றும் துடைப்பங்களுடன், குடியிருப்பாளர்கள் சந்தேஷ்காலியின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் இறங்கியதாகவும். போராட்டத்தின்போது, ஷாஜகானின் உதவியாளர் ஷிபோபிரசாத் ஹஸ்ராவின் வீடு மற்றும் கோழிப்பண்ணை சேதப்படுத்தப்பட்டதாகவும், மேலும் சில கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன என்றும் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வலுக்கும் எதிர்ப்பு:
இதுகுறித்து எதிர்க்கட்சிகள் தெரிவிக்கையில், மக்கள் அரசாங்கத்தையும், காவல்துறையையும் நம்பவில்லை, அதனால்தான் அவர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கிறார்கள். மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் கூறுகையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியில் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பல ஆண்டுகளாக நில அபகரிப்பு, சிறுமிகளைக் கடத்தல் போன்ற கொடுமைகளுக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். காவல்துறையால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை, அவர்கள் டிஎம்சி குண்டர்களைக் கொண்டு வந்து கிராம மக்களை கைது செய்தனர். டிஎம்சி குண்டர்கள் கிராம மக்களைத் தாக்கினர், அவர்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டனர். இதற்கு ஏதாவது செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன், அங்குள்ள மக்கள் பெரும் ஆபத்தில் உள்ளனர்" என்று மஜும்தார் கூறியதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.
Protests have erupted across Basirhat’s Sandeskhali. Locals are demanding arrest of dreaded monster Shahjahan Sheikh and his men. But what should shake our collective conscience, is the chilling account of how Shahjahan and his men would abduct young, good looking, married women… pic.twitter.com/OdDCvqN2sX
— Amit Malviya (@amitmalviya) February 9, 2024
தேடும் பணி தீவிரம்:
செய்தியாளர் சந்திப்பில், கூடுதல் டிஜிபி மனோஜ் வர்மா தெரிவிக்கையில், வன்முறைகளில் ஈடுபட வேண்டாம் என்று பொதுமக்களை வலியுறுத்தினார். "பதிவு செய்யப்பட்ட அனைத்து புகார்கள் மீதும் விசாரணை நடந்து வருகிறது. உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில், சட்டத்தை யாராவது கையில் எடுத்தால், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் அவர்கள் இருக்கும் இடத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதம், ஷாஜகான் வீட்டில் ரேஷன் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய சோதனையை தொடர்ந்து காணாமல் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.