WB Polls: மேற்குவங்கத்தில் தொடரும் மரணங்கள்.. அடுத்தடுத்த வன்முறையால் 26 பேர் பலி.. உள்ளாட்சி தேர்தலுக்கே இப்படியா?
மேற்குவங்க மாநில உள்ளாட்சி தேர்தலில் பாஜக முகவர் ஒருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதாக, வெளியாகி இருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநில உள்ளாட்சி தேர்தலில் பாஜக முகவர் ஒருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதாக, வெளியாகி இருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பான உள்ளாட் தேர்தல்:
பல்வேறு வன்முறைகளுக்கு மத்தியில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்குவங்க மாநிலத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆன பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், துணை ராணுவத்தினர் மற்றும் மாநில காவலதுறையினரின் பாதுகாப்புடன், இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.
வாக்குச்சாவடியில் கொல்லப்பட்ட பாஜக பிரமுகர்:
கூச் பெஹாரின் ஃபலிமாரி கிராமப் பஞ்சாயத்தில் உள்ள வாக்குச் சாவடியில், நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் பாஜக வேட்பாளரின் முகவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பேசிய பாஜக வேட்பாளர் மாயா பர்மன், ”திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள் தான் என் மீது தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள் குண்டு வீசி நடத்திய தாக்குதலில் தான் எனது முகவர் கொல்லப்பட்டார்” எனவும் தெரிவித்துள்ளார். தற்போது அந்த வேட்பாளர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதோடு, தாக்குதல் நடைபெற்ற வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
குவியும் கண்டனங்கள்:
பாஜக முகவர் கொல்லப்பட்டதற்கு அக்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாநில தேர்தல் ஆணையார், முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் சேர்ந்து கொண்டு தேர்தல் வெற்றியை பறிக்க நினைக்கின்றனர். துணை ராணுவப்படையினர் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படவில்லை. இதுதொடர்பாக உச்சநிதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WATCH | West Bengal #PanchayatElection | Abdullah, the booth agent of an independent candidate killed in Pirgachha of North 24 Parganas district. Villagers stage a protest and demand the arrest of the accused and allege that the husband of TMC candidate Munna Bibi is behind the… pic.twitter.com/XHu1Rcpv6j
— ANI (@ANI) July 8, 2023
சுயேச்சை வேட்பாளர் கொலை:
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பிர்காச்சாவில் சுயேச்சை வேட்பாளரின் முகவர் அப்துல்லா கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்குப் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் முன்னா பீபியின் கணவர் இருப்பதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யக் கோரியும் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். சாலைகளில் கட்டைகளை போட்டு எரித்தும், வாகனங்களை நிறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 3 பேர் பலி?
இதனிடையே, மணிக்சக் மால்டா பகுதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் தங்களது கட்சியை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
நள்ளிரவில் காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை:
இதனிடையே, நேற்று நள்ளிரவில் முர்ஷிதாபாத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. அதில் காங்கிரஸ் தொண்டர் அர்விந்தோ மொண்டல் கொல்லப்பட்டதோடு, அவரது வீடும் கடுமையாக சேதப்பட்டது. இதனால், இரு கட்சியினருக்கும் இடையேயான மோதல் வலுவானது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டார்கள். ஆனால், அரவிந்தோ மொண்டலை தாங்கள் கொல்லவில்லை என திரிணாமூல் கட்சி தரப்பு விளக்கமளித்துள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கலவரங்கள், தற்போது அடுத்தடுத்து நடந்து வரும் மோதல்களில் சேர்த்து இதுவரை உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 26-ஐ எட்டியுள்ளது. இதனால், மேற்குவங்க மாநிலம் முழுவதும் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.