மக்களே உஷார்...லிங்கை கிளிக் செய்ததால் வந்த வினை..! 40 பேர் வங்கிக்கணக்கில் லட்சக்கணக்கில் அபேஸ்..!
மோசடி கும்பல் அனுப்பிய லிங்கை கிளிக் செய்ததால் 40 வங்கி வாடிக்கையாளர்கள் மூன்று நாட்களுக்குள் லட்சக்கணக்கான பணத்தை அவர்களின் வங்கி கணக்கில் இழந்துள்ளனர்.
இன்றைய உலகில் அன்றாடம் செய்யக்கூடிய பல பணிகளை இன்று இணையம் எளிதாக்கி உள்ளது. கடைக்குச் சென்று பொருள்களைத் தேடி எடுத்து,பில் போட்டு வாங்கி வர வேண்டிய அவசியம் இல்லை. நினைத்த சமயத்தில், தேவைப்பட்டப் பொருள்களை நம் வீடு தேடி வர வைக்கிறது தொழில்நுட்பம்.
வங்கிக்குச் செல்லாமலே சுலபமாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடிகிறது. அதுவும் கொரோனா காலத்தில், நமது இணையப் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. அதேசமயம், இணையப் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க அதற்கு ஏற்ற வகையில் இணையம் தொடர்பான மோசடிகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
மும்பையில் அதிர்ச்சி:
அதன் தொடர்ச்சியாக, மும்பையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது, மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) செயல்முறை மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும்.
அந்த வகையில், மும்பையில் இயங்கி வரும் தனியார் வங்கியின் வாடிக்கையாளர்கள் 40 பேருக்கு போலி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில், தங்கள் KYC மற்றும் PAN விவரங்களை புதுப்பிக்க அனுப்பப்பட்ட இணைப்பை கிளிக் செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டது.
லிங்கை கிளிக் செய்ததால் வந்த வினை:
இதன் காரணமாக, வங்கி வாடிக்கையாளர்களும் லிங்கை கிளிக் செய்துள்ளனர். இதனால், மூன்று நாட்களுக்குள் லட்சக்கணக்கான பணம் அவர்களின் வங்கி கணக்கில் இருந்து ஏமாற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், பெரும் பிரச்னையை கிளப்பியுள்ள நிலையில், மும்பை காவல்துறை இது தொடர்பாக அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. அதாவது, வங்கி வாடிக்கையாளர்களின் ரகசிய விவரங்களைக் கேட்கும் இதுபோன்ற இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்க குடிமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
"வாடிக்கையாளர்கள், தங்கள் கேஒய்சி/பான் கார்டு விவரங்களைப் புதுப்பிக்கவில்லை என்றால், அவர்களின் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என மோசடி செய்பவர்கள் மோசடி இணைப்புகளுடன் இதுபோன்ற போலி எஸ்எம்எஸை அனுப்புகிறார்கள்.
இத்தகைய இணைப்புகள் வாடிக்கையாளர்களை அவர்களின் வங்கியின் போலி இணையதளத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு அவர்கள் வாடிக்கையாளர் ஐடி, கடவுச்சொல் மற்றும் பிற ரகசிய விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுகிறார்கள்" என மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
ஏமாற்றப்பட்ட சீரியல் நடிகை:
மோசடி செய்ததாகக் கூறப்படும் பாதிக்கப்பட்ட 40 பேரில் தொலைக்காட்சி நடிகை ஸ்வேதா மேமனும் ஒருவர். அவர் அளித்த புகாரில், "கடந்த வியாழன் அன்று தனது வங்கியில் இருந்து வந்ததாக நம்பி அந்த போலி குறுஞ்செய்தியின் இணைப்பை கிளிக் செய்தேன். திறக்கப்பட்ட போர்ட்டலில், அவர் தனது வாடிக்கையாளர் ஐடி, கடவுச்சொற்கள் மற்றும் OTP ஆகியவற்றை உள்ளிடூ செய்துள்ளார்.
வங்கி அதிகாரி போல் காட்டிக் கொண்ட ஒரு பெண்ணிடமிருந்து தனக்கும் தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் தனது மொபைல் எண்ணில் பெற்ற மற்றொரு OTP-ஐ உள்ளீடு செய்ய சொன்னார். இதையடுத்து அவரது கணக்கில் இருந்து 57,636 ரூபாய் திருடப்பட்டது" என மேமன் கூறியுள்ளார்.