Babiya crocodile : 75 வயதான கேரளாவின் ‘சைவ முதலை ‘ மரணம் ! - அதிர்ச்சியில் பக்தர்கள் !
மென்மையான சைவ பிரியை என அழைக்கப்பட்ட முதலை , எப்போது அந்த குளத்திற்குள் வந்தது ? எப்படி வந்தது ? யார் இதற்கு பெயர் வைத்தார்கள் என்றெல்லாம் தெரியவில்லை.
சைவ உணவை விரும்பி உண்ணும் பபியா என்னும் முதலை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் காசர்கோடு மாவட்டம் அனந்தபுரா என்ற கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. அந்த கோவிலின் வளாகத்திற்குள் உள்ள குளத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக முதலை ஒன்று வாழ்ந்து வந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாதங்களை அந்த முதலைக்கு வைத்து , அதனையும் வழிபட துவங்கினர். பொதுவாக முதலைகளுக்கு மாமிசங்கள்தான் உணவாக இருக்கும் , ஆனால் இந்த முதலை பக்தர்கள் வைக்கும் புளி சோறு , பொங்கல் சோறு என சைவ உணவுகளை பிரியமாக சாப்பிடும். இதனாலேயே இந்த முதலை இந்தியா முழுவதும் பிரபலமானது. பபியா என பெயர் வைத்து அழைக்கப்பட்ட இந்த முதலையை பெருமாளின் தூதர் என சிலர் நம்புகின்றனர். இந்த நிலையில் 75 வயதான பபியா முதலைதற்போது உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்து போன முதலையை தற்போது பொதுமக்கள் பார்வைக்காக வைத்திருக்கின்றனர்.
மென்மையான சைவ பிரியை என அழைக்கப்பட்ட முதலை , எப்போது அந்த குளத்திற்குள் வந்தது ? எப்படி வந்தது ? யார் இதற்கு பெயர் வைத்தார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் இந்த முதலையால் அங்கிருக்கும் பக்தர்களுக்கோ, கோயில் நிர்வாகிகளுக்கோ கடந்த 75 ஆண்டுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதில்லை என்கின்றனர் அந்த கோயில் பூசாரிகள் . இரவு நேரங்களில் குளத்தை விட்டு , கோயில் வளாகங்களில் சுற்றித்திரியும் முதலை எப்போது வருகிறது , எப்போது மீண்டும் குளத்திற்குள் போகிறது என்பது கூட தெரியாது என்கிறார் கோயில் பூசாரி. மேலும் பேசிய அவர் கோயில் குளத்தில் நிறைய மீன்கள் உள்ளன. ஆனால் அந்த மீன்களை இதுவரையில் தாக்கவோ , அவைகளை சாப்பிட முயன்றதோ கிடையாது. அந்த முதலை நான் வைக்கும் சோற்று உருண்டைகளைத்தான் விரும்பி சாப்பிடும் என்கிறார்.
View this post on Instagram
வனவிலங்கு நிபுணர்களின் கூற்றுப்படி பபியா ஒரு முகர் வகை முதலை , அது கோவிலை தனக்கு உணவு கிடைக்கும் இடமாக பார்த்திருக்கிறது. ஆரம்ப காலம் முதலே சைவ உணவுகளை சாப்பிட்டு அந்த முதலை பழக்கப்பட்டிருக்கலாம். காடுகளில் இவ்வகை முதலைகள் மீன்கள் , மான்கள், காட்டுப்பன்றி போன்ற சிறிய மற்றும் பெரிய பாலூட்டிகளை உண்டு வாழக்கூடிய ஒரு இனம் என்கின்றனர்.