Babiya Crocodile Passes Away : "புரியாத புதிராகவே வாழ்ந்து மறைந்த பபியா முதலை"! - அப்படி என்ன ஸ்பெஷல்!
Babiya Crocodile : கேரளாவில் சைவ முதலையான பபியா மறைவு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள காசர்கோடு. இந்த மாவட்டத்தில் புகழ்பெற்ற அனந்தபத்மநாப சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. அனந்தபுரம் கிராமத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தைச் சுற்றியிலும் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியில் வாழ்ந்து வந்த புகழ்பெற்ற பபியா என்ற சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வந்த முதலை இன்று உயிரிழந்தது. பெண் முதலையான பபியாவின் மறைவால் பக்தர்களும், மக்களும் மிகுந்த சோகம் அடைந்துள்ளனர்.
உயிரிழந்த பபியாவை கோவில் நிர்வாகத்தின் சார்பில் பராமரித்து வந்தனர். பொதுவாக தண்ணீருக்கு உள்ளே மிகப்பெரிய விலங்குகளை எளிதில் வீழ்த்தும் உயிரினமாக முதலை உள்ளது. ஆனால், அனந்தபத்மாபசுவாமி ஆலயத்தில் வாழ்ந்து வந்த பெண் முதலையான பபியா எந்தவொரு உயிருக்கும் தீங்கு விளைவிக்காத முதலையாகவே வாழ்ந்து வந்தது.
75 வயதான பபியா அந்த ஆலயத்தின் புனிதமாகவும், அப்பகுதியின் அடையாளமாகவே திகழ்ந்து வந்த பபியா முதலை சைவ உணவை மட்டும் சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வந்தது. அனந்தபத்மநாப சுவாமி ஆலயத்தை சுற்றியுள்ள ஏரியில் வாழ்ந்து வந்த பபியா முதலை கடந்த 70 ஆண்டுகளாக ஆலயத்தில் இருந்து வழங்கப்படும் பிரசாதத்தை சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வந்தது.
ஒவ்வொரு நாளும் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்ற பிறகு பபியாவிற்கு பிரசாதம் உணவாக வழங்கப்படும். வேகவைதத அரிசியும், வெல்லமும் பெண் முதலையான பபியாவிற்கு வழங்கப்பட்டு வந்தது. மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களும் பபியாவிற்கு பிரசாதம் வழங்கி வந்தனர். உயிரிழந்த பபியா கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளது.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பபியா கடந்த இரண்டு நாட்களாகவே, சாப்பிடுவதற்காக வராமல் இருந்துள்ளது. இதனால், கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு ஏரியில் உயிரிழந்த நிலையில் பபியா மிதந்துள்ளது. பின்னர், முதலை பபியாவின் உடல் மீட்கப்பட்டு சம்பிரதாய முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச்சடங்கில் ஏராளமான பக்தர்கள் கண்ணீருடன் பங்கேற்றனர்.
கோவில் வளாகத்திலும், ஏரியிலும் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் சுற்றி வந்த அதிசய முதலையான பபியாவின் மறைவு அந்த கிராமம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பபியா முதலை அனந்தபத்மநாப சுவாமி கோவில் ஏரிக்கு எப்படி வந்தது என்பதே ஒரு புதிராக இருந்து வருகிறது. 1945ம் ஆண்டு இந்த ஏரியில் இருந்த முதலையை சுட்டுக்கொன்றதாகவும், பின்னர் அந்த ஏரியில் சில நாட்களிலே பபியா தோன்றியதாகவும் அப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.
சுமார் 75 ஆண்டுகளாக இந்த கோவில் குளத்தில் வாழ்ந்து வந்த பபியா முதலை இதுவரை குளத்தில் வாழ்ந்து வந்த மீன்களுக்கு கூட எந்த இடையூறும் செய்யாமல் வாழ்ந்து வந்ததுதான் மிகவும் ஆச்சரியமான ஒன்றாக உள்ளது. சில சமயங்களில் கோவிலின் முன்பகுதிக்கு பபியா வருவதும், அது இறைவனை வணங்குவது போலவும் இருக்கும் காட்சிகள் முன்பு சமூக வலைதளங்களில் வைரலாகியது.