சபரிமலை ஐயப்பன் கோயில்: பக்தர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்தது! முக்கிய அறிவிப்பு வெளியானது!
சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு புனித யாத்திரைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல, மகரவிளக்கு புனித யாத்திரைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.
மலையாள மாதமான விருச்சிகம் (காா்த்திகை) முதல் நாளான திங்கள்கிழமை சென்ற மாதம் நவம்பர் 17ம் தேதி மண்டல பூஜை காலம் தொடங்கியது. இதையொட்டி, பக்தா்களின் சரண கோஷத்துடன் ஐயப்பன் கோயில் நடை ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டது. பின்னா், பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். சன்னிதானம், யாத்திரை பாதை மற்றும் அடிவார முகாம்களில் முதல் நாளிலேயே பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.
நவம்பர் மாதம் 16 ஆம் தேதி மண்டல-மகரவிளக்கு யாத்திரை தொடங்கியது முதல் ஞாயிற்றுக்கிழமை(நவ.30) வரை, சபரிமலையில் 12,47,954 பக்தர்கள் வழிபாடு செய்துள்ளனர். நவம்பர் 30ல் மட்டும் மாலை 7 மணி வரை 50,264 பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர். கடந்த சில நாள்களாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்குள் உள்ளது. இதனால் பக்தர்கள் சிரமமின்றி வழிபாடு செய்கின்றனர். இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் 3 ஆம் தேதி மாலை 7 மணி நிலவரப்படி, மொத்தம் 14,95,774 பக்தர்கள் கோயிலை அடைந்துள்ளனர்.
மாலை 7 மணிக்குப் பிறகான வருகை இன்னும் கணக்கிடப்படாததால், மொத்த பக்தர்கள் வருகை 15 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணையவழி முன்பதிவுகளைப் பெற்ற பக்தர்களில் சுமார் 15 சதவீதம் பேர் வரவில்லை என்றும், நேரடிப் பதிவு வரம்பு தொடர்ந்து 5,000 ஆக உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். புதன்கிழமை நள்ளிரவு முதல் மாலை 7 மணி வரை, 66,522 பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சபரிமலையில் கூட்ட நெரிசல் முற்றிலும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். மண்டல பூஜை யாத்திரையின் 41 நாட்கள் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை டிசம்பா் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது, ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு, சிறப்புத் தீபாராதனை நடைபெறும். அன்றிரவு நடை அடைக்கப்பட்டு, மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பா் 30-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். மகரஜோதி தரிசனம் ஜனவரி 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.





















