Ayodhya Ram Temple : அயோத்தி ராமர் சிலையின் பிரதிஷ்டை எப்போது? தேதி அறிவிப்பு..!
இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் கோயில் நன்கொடைகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக கோயில் அறக்கட்டளை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதிஷ்டை செய்யப்படும் ராமர் சிலை:
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இச்சூழலில், ராம் லல்லாவின் (குழந்தை ராமர் சிலை) பிரதிஷ்டை அடுத்தாண்டு, ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் சன்னதியின் கட்டுமானப் பணிகள் டிசம்பர் 2023க்குள் நிறைவடைந்து 2024 ஜனவரியில் பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ளது. இருப்பினும், கோயிலின் இரண்டாவது தளம் மற்றும் பிற பகுதிகளின் கட்டுமானப் பணிகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் மற்றும் சீதாவின் சிலைகளை செய்ய ஷாலிகிராம் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிலைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கற்கள் நேபாளத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளது. இந்த கற்கள், 60 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று நம்பப்படுகிறது. நேபாளத்தின் காளி கண்டகி நதியிலிருந்து இந்த கற்கள் எடுக்கப்பட்டுள்ளது.
ராமர் சிலையின் உயரம் 5 முதல் 5.5 அடி வரை இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராம நவமி நாளில் சூரியனின் கதிர்கள் நேரடியாக ராமரின் நெற்றியில் விழும் வகையில் ராமர் சிலையில் உயரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் கட்டும் பணி நடைபெற்று வரும் அயோத்தியில் சிலைகள் செய்யும் பணியும் நடந்து வருகிறது.
ராமர் சிலையை நிறுவும் பிரதமர் மோடி:
முன்னதாக, இதுகுறித்து ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மஹராஜ் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ராமர் சிலையை நிறுவ உள்ளார்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "2024ஆம் ஆண்டு ஜனவரிக்குள் கருவறை, முதல் தளம் மற்றும் தரிசனத்திற்கான ஏற்பாடுகளை முடிக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. இந்தியாவை பற்றிய உலகின் பார்வை மாறிவிட்டது. யோகா, ஆயுர்வேதம் மற்றும் இந்திய இசை உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளது. உலகம் முழுவதும் ஒரு கலாச்சார புரட்சி ஏற்படும்" என்றார்.
வரும் 2024ஆம் ஆண்டு, மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராமர் கோயில் திறப்பு பாஜகவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி தரும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
1990களில், ராமர் கோயில் விவகாரத்தை முன்னிறுத்திதான், தேசிய அளவில் பாஜக மிக பெரிய கட்சியாக உருவெடுத்தது. தற்போதைய மதிப்பீட்டின்படி, ராமர் கோயில் மற்றும் வளாகத்தின் மொத்த கட்டுமானச் செலவு தோராயமாக 1,800 கோடி ரூபாயாக இருக்கும் என ராமர் கோயில் அறக்கட்டளை கணித்துள்ளது.
சன்னதி மற்றும் ஐந்து மண்டபங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று தள மேல்கட்டமைப்பின் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன என அறக்கட்டளை சமீபத்தில் தெரிவித்தது.
கோயில் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பே, நன்கொடைகள் குவிய தொடங்கியது. இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் கோயில் நன்கொடைகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக கோயில் அறக்கட்டளை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.