Atishi Marlena : கல்வித்துறையில் மாற்றத்தை நிகழ்த்தியவர்...ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர்...அமைச்சராகும் அதிஷி?
சிறை சென்ற இருவருக்கு பதிலாக இருவர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் உச்சக்கட்ட அரசியல் பதற்றம் நிலவி வருகிறது. அமைச்சர்களாக பொறுப்பு வகித்த இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி அரசியல் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, சிறை சென்ற இருவருக்கு பதிலாக இருவர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர்கள்:
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பணமோசடி வழக்கில் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டு அப்போதில் இருந்து சிறையில் இருந்து வருகிறார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா, ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக தொடர் விமர்சனங்களை மேற்கொண்டார்.
துணைநிலை ஆளுநரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இதுதொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வழக்கு பதிவு செய்தது. இதை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை சிசோடியா கைது செய்யப்பட்டார்.
மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிசோடியா வழக்கு தொடர்ந்தார். ஆனால், அவரின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து. 18 துறைகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஜெயின் ஆகியோர் நேற்று மாலை பதவி விலகினர்.
புதிய அமைச்சர்கள்:
இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களுமான சவுரப் பரத்வாஜ் மற்றும் அதிஷி ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர் நியமனங்களைத் தொடர்பாக தேவையான ஆவணங்களை துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
தெற்கு டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் பரத்வாஜ். இவர், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளராகவும் உள்ளார். இவர், டெல்லியில் குடிநீர் வழங்கும் அமைப்பான டெல்லி ஜல் வாரியத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார்.
கடந்த 2013-14ஆம் ஆண்டு, 49 நாள்கள் மட்டுமே நீடித்த ஆம் ஆத்மி அரசாங்கத்தில் கேபினட் அமைச்சராக பொறுப்பு வகித்தார். ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவைக் கொண்டுவரத் தவறியதற்குப் பொறுப்பேற்று கெஜ்ரிவால் அரசு பதவி விலகியது.
கல்வித்துறை மாற்றத்திற்கு வித்திட்ட அதிஷி:
கல்காஜி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் அதிஷி. ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுவில் உறுப்பினராக உள்ளார். கடந்த 2015 மற்றும் 2017க்கு இடைப்பட்ட பகுதியில் கல்வித்துறையை கவினித்து வந்த சிசோடியாவின் ஆலோசகராக பணியாற்றினார். குறிப்பாக, டெல்லி கல்வித்துறையில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் அதிஷி.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர், கடந்த சில ஆண்டுகளாக கட்சியின் முக்கிய முகமாக உருவெடுத்துள்ளார். செய்தி தொலைக்காட்சிகளில், பல்வேறு விவாதங்களில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக கலந்து கொண்டார்.