Congress: குடும்பத்தாலேயே வளர்ச்சி.. குடும்பத்தாலேயே வீழ்ச்சி.. காங்கிரஸ் தேய்ந்து கட்டெறும்பான கதை!
நாட்டையே கட்டியாண்ட காங்கிரஸ் கட்சி, இன்று மாநிலக் கட்சியாகச் சுருங்கி வீழ்ந்து வருகிறதா? 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் அதைத்தான் புலப்படுத்துகிறதா? பார்க்கலாம்.
’’நல்ல நோக்கத்துக்காக காங்கிரஸ் இயக்கத்தைத் தொடங்கினோம். அது வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது. இனி காங்கிரஸ் இயக்கம் தேவையில்லை. அதைக் கலைப்பதுதான் நல்லது.’’ - இந்தியா விடுதலை பெற்றதும் காந்தியடிகள் சொன்ன வார்த்தைகள் இவை.
அப்போது காந்தி சொன்னது, இப்போது பாஜகவால்.. இல்லையில்லை காங்கிரஸாலேயே நிறைவேறி வருகிறது.
நாட்டையே கட்டியாண்ட காங்கிரஸ் கட்சி, இன்று மாநிலக் கட்சியாகச் சுருங்கி வீழ்ந்து வருகிறதா? 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் அதைத்தான் புலப்படுத்துகிறதா? பார்க்கலாம்.
136 ஆண்டுகள் பழமையான கட்சி காங்கிரஸ். 1885-ல் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயராலேயே தொடங்கப்பட்ட கட்சி காங்கிரஸ். ஆனால் காங்கிரஸ் கட்சிதான் காலனியாதிக்கத்தில் இருந்து இந்தியர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது.
சுதந்திரத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட 17 நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களில் அதிக முறை வென்ற கட்சி. 3 முறை தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த கட்சி. 54 ஆண்டுகள் அதிகாரக் கட்டிலில் அமர்ந்திருந்த கட்சி. 6 பிரதமர்களைக் கண்ட கட்சி. அப்படிப்பட்ட கட்சி இன்று 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது. அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த 2 மாநிலங்களின் நிலை என்ன என்பது இப்போதே கேள்விக் குறியாக இருக்கிறது.
நேரு சகாப்தம்
சுதந்திரப் போராட்டத்துக்குப் பிறகான விடுதலைக்கு வித்திட்டவர்களில் ஜவஹர்லால் நேரு முக்கியமானவர். 1952ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் தேர்தலில் 401 இடங்களில் 364 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. தனியொரு கட்சியாகப் பெரும்பாலான மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடித்தது. பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை காங்கிரஸ்தான் ஆண்டது. அதை நேரு காலம் என்றே வரலாற்று அறிஞர்கள் அழைத்து வந்தனர்.
நேரு காலத்தில்தான் ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தொழில்மயமாக்கல், பொதுத்துறை நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்தன.
இந்திரா காந்தி ஆட்சிக்காலம்
நேருவுக்குப் பிறகு லால் பகதூர் சாஸ்திரி முழுநேரப் பிரதமர் ஆனார். அவரின் காலத்திலும் காங்கிரஸ் அபார வளர்ச்சியைக் கண்டது. 1966 வரை ஆண்ட அவர், இந்தியா - பாகிஸ்தான் போரில் இந்திய மக்களின் ஹீரோ ஆனார். 1966-ல் அவரின் மறைவுக்குப் பிறகு நேருவின் மகள் இந்திரா காந்தி பிரதமர் ஆனார். எமர்ஜென்ஸி காலத்தில் காங்கிரஸ் உடைந்தது. ஆனாலும் 15 வருடங்கள், தான் கொல்லப்படும் வரை பிரதமராக இருந்தார் இந்திரா.
அவருக்குப் பிறகு 401 இடங்களைப் பெற்று, மகன் ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார். கணினிமயமாக்கலை இந்தியாவுக்கு அறிமுகம் செய்தார் ராஜீவ். போஃபர்ஸ் ஊழல் கறை அவருக்குப் பின்னடவை ஏற்படுத்தியது. காலங்கள் உருண்டோட ஆரம்பித்ததும் காங்கிரஸின் வளர்ச்சியும் தேய ஆரம்பித்தது.
1996-ல் முதல்முறையாகப் பின்னடவைச் சந்தித்த காங்கிரஸ்
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, 1991-ல் தென்னிந்தியாவில் இருந்து முதன்முதலாக பி.வி.நரசிம்ம ராவ் பிரதமர் ஆனார். 1996-ல் காங்கிரஸ் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. தன்னுடைய வரலாற்றில் முதல்முறையாக 140 இடங்களைப் பிடித்துச் சுருங்கியது காங்கிரஸ்.
1998-லும் 141 இடங்களை மட்டுமே காங்கிரஸால் பெற முடிந்தது. ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனார். போதிய அரசியல் முதிர்ச்சியின்மை, வெளிநாட்டுப் பெண்மணி என்ற அடையாளம் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பை உருவாக்கியது. காங்கிரஸில் இருந்த சரத் பவார், வெளியேறி தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் (என்சிபி) தொடங்கியது பின்னடைவை ஏற்படுத்தியது.
2004-ல் எழுச்சி
எனினும் 2004-ல் வெல்லத் தீவிரமாகத் திட்டமிட்டார் சோனியா காந்தி. என்சிபி, திமுக உள்ளிட்ட பிராந்தியக் கட்சிகளுடனான கூட்டணி ஏற்படுத்தப்பட்டது. மக்கள் நலத் திட்டங்கள் குறித்த முழக்கம் எழுப்பப்பட்டது. 222 இடங்களைப் பெற்றது காங்கிரஸ். அப்போது ஏராளமான சமூக நலத்திட்டங்கள், வெளியுறவுக் கொள்கைகள் கொண்டு வரப்பட்டன. 2009-லும் 262 இடங்களைப் பிடித்து ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ்.
2ஜி உள்ளிட்ட தொடர்ச்சியான ஊழல் குற்றச்சாட்டுகள், நீண்ட காலம் ஆட்சியில் இருந்ததால் இயல்பாகவே ஏற்பட்ட அதிருப்தி, நாட்டின் பொருளாதாரச் சூழல் ஆகியவற்றால் 2014-ல் ஆட்சியை இழந்தது காங்கிரஸ். குறிப்பாக 2ஜி ஊழல் குற்றச்சாட்டு சர்வதேச ஊடகங்கள் வரை பேசப்பட்டது. அப்போதுதான் காங்கிரஸ் தன் வரலாற்றில் முதல்முறையாக வெறும் 44 இடங்களுக்குச் சுருங்கியது. முதல்முறையாக நாடு முழுவதும் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குகளைப் பெற்றிருந்தது. அப்போது தொடங்கிய காங்கிரஸின் வீழ்ச்சி, மெல்ல மெல்ல மாநிலங்களிலும் வளர்ந்து வருகிறது.
2019 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும் 52 இடங்களை மட்டுமே பிடித்து, 19.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது காங்கிரஸ். தான் ஆட்சி செய்த மாநிலங்களையும் ஒவ்வொன்றாக இழந்து வருகிறது. இதற்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. ஆனாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
காங்கிரஸ் பெற்ற தொகுதிகள்: ஒரு பார்வை
தேர்தல் ஆண்டு - வெற்றிபெற்ற தொகுதிகள்
1951-364
1957-371
1962-361
1967-283
1971-352
1977-153
1980-351
1984-415
1989-197
1991-244
1996-140
1998-141
1999-114
2004-145
2009-206
2014-44
2019- 52
காங்கிரஸ் இல்லாத இந்தியா
காங்கிரஸ் இல்லாத இந்தியாவை அமைப்போம் எனத் தேர்தல் பிரச்சாரத்தில் முழக்கமிட்டு, கடந்த 2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது பாஜக. அதைப் படிப்படியாகச் செயல்படுத்தியும் வருகிறது.
தற்போது நாடு முழுவதும் இரண்டு இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. அதாவது சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களை மட்டுமே காங்கிரஸ் ஆள்கிறது. தமிழ்நாடு, ஜார்க்கண்ட், மகாராஷ்ட்ரா, ஆகிய 3 மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றிருக்கிறது.
முன்னதாக பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த நிலையில், இன்று வெளியான 5 மாநிலத் தேர்தல் முடிவுகளில் பஞ்சாப் மாநிலத்தை ஆத் ஆத்மியிடம் இழந்தது காங்கிரஸ்.
பாஜக மீது கடுமையான எதிர்ப்பலைகள் இருந்தும் அதை வாக்குகளாக மாற்றிக்கொள்ளத் தவறியது, பாஜகவின் இந்துத்துவக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல், மிதமான இந்துத்துவத்துக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது, பாஜக அளவுக்கு ஒவ்வொரு தேர்தலிலும் களத்தில் அசுரத்தனமான உழைப்பைக் கொடுக்காதது, கட்சிக்கு வலிமையான, கட்டுக்கோப்பான தலைவர் இல்லாதது, குடும்பத்தினரின், வாரிசுகளின் ஆதிக்கம், இதனால் ஏற்படும் உட்கட்சிப் பூசல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நூற்றாண்டுகள் பழமையான காங்கிரஸ் கப்பல், கரை சேர முடியாமல் தவிக்கிறது.