இந்து, முஸ்லீம் இடையே நிலம் விற்க கட்டுப்பாடு.. உ.பி.யை தொடர்ந்து அஸ்ஸாமிலும் சர்ச்சைக்குரிய சட்டம்!
'லவ் ஜிகாத்' தொடர்பான வழக்குகளில் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை வழங்கும் வகையில் புதிய மசோதா கொண்டு வரப்பட உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இது தொடர்பான சட்ட மசோதா ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.

பாஜக அரசு கொண்டு வரும் சட்டங்கள் தொடர் சர்ச்சையை கிளப்பி வருகின்றன. அது மத்திய பாஜக அரசாக இருந்தாலும் சரி, மாநில பாஜக அரசாக இருந்தாலும் சரி. வேளாண் சட்டம் (தற்போது ரத்து செய்யப்பட்டுவிட்டது) தொடங்கி சமீபத்தில் உத்தரகாண்டில் அமல்படுத்தப்பட்ட மாநில பொது சிவில் சட்டம் வரை பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் 'லவ் ஜிகாத்' தொடர்பாக மாநில பாஜக அரசு கொண்டு வந்த மசோதா தேசிய அளவில் பேசுபொருளாக மாறியது. உத்தரப் பிரதேசம் சட்ட விரோத மதம் மாற்ற தடை (திருத்தம்) மசோதா, 2024 என்ற பெயரில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு புதிய மசோதாவை அறிமுகம் செய்தது.
உ.பி.யை பின்தொடரும் அஸ்ஸாம்: அதன்படி, 'லவ் ஜிகாத்' வழக்குகளில் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை வழங்க வழிவகை செய்யப்பட்டது. உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து அஸ்ஸாமிலும் இந்த சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. கவுகாத்தியில் நடைபெற்ற மாநில பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவரும் அஸ்ஸாம் முதலமைச்சருமான ஹிமந்த பிஸ்வா சர்மா, "தேர்தல் நேரத்தில் லவ் ஜிகாத் பற்றி பேசுகிறோம்.
விரைவில், இதுபோன்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டம் கொண்டு வருவோம். புதிய குடியுரிமைக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இதன் கீழ் அஸ்ஸாமில் பிறந்தவர்களுக்கு மட்டுமே மாநில அரசின் வேலைவாய்ப்புகள் தரப்படும்.
சில மாவட்டங்களில், அரசு அனுமதியின்றி மாற்று மதத்தவர் (இந்து, இஸ்லாமியர்) இடையே நிலம் விற்பனை செய்யப்படுவது அனுமதிக்கப்படாது" என்றார்.
இம்மாத இறுதியில் நடைபெறும் சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரில் இந்த சட்டங்கள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'லவ் ஜிகாத்' என்றால் என்ன? இந்து மதத்தை சேர்ந்த பெண்களை, இஸ்லாமிய ஆண்கள் காதல் என்ற பெயரில் ஏமாற்றி, மதமாற்றி திருமணம் செய்து கொள்வதாக இந்துத்துவ வலதுசாரிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால், இதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பவே வலதுசாரிகள் இப்படி செய்தவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

