ஆசியாவில் நம்பர் 1.. குஜராத்தில் உள்ள பணக்கார கிராமம்.. இவ்வளோ செழிப்புக்கு காரணம் என்ன?
ஆசியாவின் பணக்கார கிராமம் என அழைக்கப்படும் மதாபூரில் அப்படி என்னதான் சிறப்பம்சங்கள் இருக்கின்றன. வாங்க தெரிந்து கொள்வோம்.
ஒட்டுமொத்த நாட்டிலேயே வர்த்தகம் செய்வதில் முன்னணி மாநிலமாக விளங்குவது குஜராத். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத், நாட்டின் தலைசிறந்த தொழிலதிபர்கள் சிலரை உருவாக்கியுள்ளது. குஜராத்தின் செழிப்பு என்பது நகரங்களில் மட்டும் சுருங்கிவிடவில்லை. கிராமங்களிலும் பரந்து விரிகிறது.
ஆசியாவை திரும்பி பார்க்க வைத்த பணக்கார கிராமம்: அதற்கு எடுத்துக்காட்டாக இருப்பது கச்சில் அமைந்துள்ள மதாப்பூர். ஆசியாவின் பணக்கார கிராமம் என அழைக்கப்படுகிறது. குஜராத் நகரங்களுக்கே சவால் விடும் வகையில் செல்வ செழிப்பாக உள்ளது. புஜின் புறநகர் பகுதியில் இந்த கிராமம் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் 7,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலையான வைப்புத்தொகையை வைத்திருக்கிறார்கள். இது அவர்கள் எவ்வளவு பணக்காரர்கள் என்பதைக் காட்டுகிறது. மதாபூரில் படேல் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். அவர்களின் மக்கள்தொகை சுமார் 32,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு, அவர்களின் மக்கள் தொகை 17,000 ஆக இருந்தது.
இந்த கிராமத்தில் HDFC, SBI, PNB, Axis Bank, ICICI மற்றும் யூனியன் வங்கி என 17 முக்கிய அரசு மற்றும் தனியார் வங்கிகள் உள்ளன. ஒரே கிராமத்தில் இவ்வளவு வங்கிகள் அமைந்திருப்பது என்பது அசாதாரணமானது. இருந்தபோதிலும், பல வங்கிகள் தங்கள் கிளைகளை இங்கு திறக்க ஆர்வமாக உள்ளன.
இவ்வளோ செழிப்புக்கு காரணம் என்ன? மதாப்பூர் கிராமத்தின் செழிப்புக்கு காரணம், வெளிநாடு வாழ் இந்தியர்களே ஆவர். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கோடிக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்கிறார்கள். கிராமத்தில் கிட்டத்தட்ட 20,000 வீடுகள் உள்ளன. ஆனால், சுமார் 1,200 குடும்பங்கள் வெளிநாட்டில் வாழ்கின்றன. பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகளில்.
மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கட்டுமானத் தொழில்களை குஜராத்திகளே பெரிதும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். குறிப்பாக, மதாப்பூரில் இருந்து சென்றவர்கள் பெரும் செல்வாக்கு படைத்தவர்களாக உள்ளனர். மத்திய ஆப்பிரிக்கா மட்டும் இன்றி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் நியூசிலாந்திலும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள், வெளிநாட்டில் வாழ்ந்து வேலை செய்தாலும், அவர்கள் தங்கள் கிராமத்துடன் இணைந்திருப்பதால், தங்களுடைய கிராம வங்கிகளிலேயே பணத்தை டெபாசிட் செய்ய விரும்புகிறார்கள்.