(Source: ECI/ABP News/ABP Majha)
குஜராத் தேர்தலில் இருந்து விலகினால்... பேரம் பேசிய பாஜக? - அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு!
இவ்வாறு ஒப்பந்தம் பேசியது யார் எனும் கேள்விக்கு, பாஜக ஒருபோதும் நேரடியாக அணுகாது என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாமல் விலகினால், மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் மீதான குற்றச்சாடுகளைக் கைவிடுவதாக ஒப்பந்தம் பேசியதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் 1998ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சிக்கட்டிலில் இருந்து வருகிறது. முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, குஜராத்திலும் வரும் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இம்முறை குஜராத் தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் (நவ.03) அறிவித்தது. 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதியும், 93 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக டிசம்பர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும்.
நேற்று முன் தினம் (நவ.04) குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளர் இசுதன் காத்வியை நேற்று அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.
எஸ்எம்எஸ், வாட்ஸ்அப், குரல் அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலம் அம்மாநில மக்கள் கட்சிக்கு அளித்த கருத்துகளின் அடிப்படையில் காத்வியின் அறிவிக்கப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் முன்னதாகத் தெரிவித்துள்ளனர்.
பாஜக தற்போது முதலமைச்சராக இருக்கும் பூபேந்திர படேலின் தலைமையிலேயே வரும் தேர்தலையும் சந்திக்கிறது.
இந்நிலையில், முன்னதாக என்டிடிவி செய்தி ஊடகத்துடன் கலந்துரையாடிய அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்தை விட்டு வெளியேறி அங்கு போட்டியிடாமல் இருந்தால் சத்யேந்திர ஜெயின், சிசோடியா இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் கைவிடப்படும் என தன்னிடம் பாஜக பேரம் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகினால் டெல்லி முதலமைச்சராக்கப்படுவீர்கள் எனும் டீலை மணிஷ் சிசோடியா நிராகரித்ததால், என்னிடம் ஒப்பந்தம் பேச வந்துள்ளனர் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஒப்பந்தம் பேசியது யார் எனும் கேள்விக்கு, "பாஜக ஒருபோதும் நேரடியாக அணுகுவதில்லை. அவர்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு, மற்றொருவருக்கு எனச் செல்கிறார்கள். இப்படியாக தான் நம்மை செய்தி வந்தடையும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், குஜராத் தேர்தல் மற்றும் டெல்லி மாநகராட்சித் தேர்தல் இரண்டிலும் தோல்வியை கண்டு பாஜக பயப்படுவதாகவும், தனது கட்சியை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் முன்னதாக ரத்து செய்யப்பட்ட மதுபான விற்பனைக் கொள்கை தொடர்பாக சிசோடியாவிற்கு எதிராகவும், 'ஹவாலா' பரிவர்த்தனைகள் தொடர்பாகவும் ஜெய்ன் மீதும் பதியப்பட்ட வழக்குகள் பொய்யானவை என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.