சட்டப்பூர்வ வயதுக்கு முன்னாடி இத்தனை திருமணங்களா? : குடும்ப சுகாதார கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்..
இந்தியாவில் 18 முதல் 29 வரையிலான பெண்களுள் 25 சதவிகிதம் பேரும், 21 முதல் 29 வயது வரையிலான ஆண்களில் 15 சதவிகிதம் பேரும் சட்டப்பூர்வ வயதை எட்டுவதற்கு முன்பாகவே திருமணம் செய்துள்ளனர்.
குழந்தை திருமணங்கள் குறைந்திருப்பதாக பெரும்பாலானோர் நினைத்திருந்தாலும், சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின் தரவுகளின் படி, இந்தியாவில் 18 முதல் 29 வரையிலான பெண்களுள் சுமார் 25 சதவிகிதம் பேரும், 21 முதல் 29 வயது வரையிலான ஆண்களில் சுமார் 15 சதவிகிதம் பேரும் தங்கள் சட்டப்பூர்வ வயதை எட்டுவதற்கு முன்பாகவே திருமணம் செய்துள்ளனர். இந்தியாவில் பெண்களுக்கு 18 வயது, ஆண்களுக்கு 21 வயது என்பது திருமணம் செய்வதற்கான சட்டப்பூர்வ வயதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 20 முதல் 24 வயது வரையிலான பெண்களுள் சுமார் 23 சதவிகிதம் பேர் சட்டப்பூர்வ வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2015-16ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின்படி, இதே எண்ணிக்கை சுமார் 26.8 சதவிகிதமாக இருந்தது.
தற்போது மத்திய அரசு நாடு முழுவதும் பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை 18 வயதில் இருந்து 21 வயதாக உயர்த்துவதற்காக திட்டமிட்டு வரும் சூழலில், இந்தத் தரவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் போது, மக்களவையில் பெண்களின் திருமண வயதை உயர்த்துவதற்கான சட்ட வரைவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு தரவுகளில், 12 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல் கல்வி பெற்ற பெண்கள் பிற பெண்களை விட தாமதமாக திருமணம் செய்து கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது. 25 வயது முதல் 49 வயது வரையிலான பெண்களில் பள்ளிக் கல்வி பெறாதவர்கள் சராசரியாக 17.1 வயதிலும், 12 ஆண்டுகள் அல்லது அதற்கு கூடுதலாக கல்வி பெற்றவர்கள் சராசரியாக 22.8 வயதிலும் திருமணம் செய்து கொள்கின்றனர்.
மாநிலங்கள் வாரியிலான இந்தத் தரவுகளில் 3 மாநிலங்களில் சுமார் ஐந்தில் இரண்டு பெண்கள் சட்டப்பூர்வ வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்து கொள்கின்றனர். மேற்கு வங்கத்தில் 42 சதவிகிதப் பெண்கள், பீகார் மாநிலத்தில் 40 சதவிகிதப் பெண்கள், திரிபுராவில் 39 சதவிகிதப் பெண்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறுகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 35 சதவிகிதப் பெண்களும், ஆந்திரப் பிரதேசத்தில் 33 சதவிகிதப் பெண்களும் சட்டப்பூர்வ வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்கின்றனர். இது மூன்றில் ஒருவர் என்ற கணக்கைக் குறிக்கிறது. சட்டப்பூர்வ வயதை எட்டுவதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் மாநிலங்களாக, 4 சதவிகிதத்தோடு லட்சத்தீவுகள், 6 சதவிகிதத்தோடு ஜம்மு காஷ்மீர், 6 சதவிகிதத்தோடு லடாக், தலா 7 சதவிகிதத்தோடு ஹிமாச்சலப் பிரதேச, கோவா, நாகாலாந்து ஆகிய மாநிலங்கள், தலா 8 சதவிகிதத்தோடு கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் என இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆய்வுகளின் மூலமாக இந்தியாவில் பெண்களை விட ஆண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புறத்தில் வாழும் பெண்களை விட நகரங்களைச் சேர்ந்த பெண்கள் தாமதமாக திருமணம் செய்வதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது.