3000 கோயில்கள்...மாநிலம் முழுவதும் கட்ட திட்டம்...இந்து மதத்தை பரப்ப அதிரடி உத்தரவிட்ட ஜெகன் மோகன் ரெட்டி..!
ஹைதராபாத், நல்கொண்டா, கரிம்நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மாநிலத்திற்கு தெலங்கானா என பெயர் வைக்கப்பட்டது.
ஒன்றுபட்ட ஆந்திர பிரதேச மாநிலம், கடந்த 2014ஆம் ஆண்டு, இரண்டாக பிரிக்கப்பட்டது. உத்தராந்திரா, கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மாநிலம் ஆந்திர பிரதேசமாக தக்க வைக்கப்பட்டது. ஹைதராபாத், நல்கொண்டா, கரிம்நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மாநிலத்திற்கு தெலங்கானா என பெயர் வைக்கப்பட்டது.
அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி:
இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நடத்தப்பட்ட முதல் தேர்தலில் ஆந்திராவில் தெலங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சி காலத்தில் பல்வேறு சமூக மக்களிடையே அதிருப்தி எழுந்த நிலையில், 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சரானார்.
இதை தொடர்ந்து, ஜெகன் மோகன் ரெட்டி, பல்வேறு சமூக நல திட்டங்களை அறிவித்தார். ஆனால், தலைநகர் விவகாரம் தொடர் சர்ச்சையாகவே இருந்து வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விசாகப்பட்டினத்தை தலைநகராக ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு அறிவித்தது.
மாவட்டத்திற்கு ஒரு கோயில்:
இந்நிலையில், அடுத்த அதிரடிக்கு தயாராகி உள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கோயில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் மாநிலத்தில் கோயில்கள் கட்டும் பணி பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆந்திர துணை முதலமைச்சரும் அறநிலையத்துறை அமைச்சருமான கோட்டு சத்தியநாராயணா கூறுகையில், "இந்து மதத்தைப் பாதுகாக்கவும் பிரச்சாரம் செய்யும் வகையிலும் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்து சமய நம்பிக்கையைப் பாதுகாக்கவும், பரப்பவும் நலிந்த பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் இந்துக் கோயில்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம்:
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வாணி அறக்கட்டளை கோவில்கள் கட்டுவதற்காக தலா 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
1,330 கோயில்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டதைத் தவிர, மேலும் 1,465 கோயில்களை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையின் பேரில், மேலும் 200 கோயிகள் கட்டப்படும்.
மீதமுள்ள கோவில்களின் கட்டுமானப் பணிகள் மற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும். அறநிலையத் துறையின் கீழ் 978 கோயில்கள் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு 25 கோயில்களுக்கும் ஒரு உதவிப் பொறியாளர் ஒதுக்கப்பட்டுள்ளார்.
கோடி கணக்கில் செலவு:
சில கோயில்களை புதுப்பிக்கவும், கோயில்களில் பூஜைகள் நடத்தவும் ஒதுக்கப்பட்ட 270 கோடி ரூபாய் CGF நிதியில் இருந்து 238 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு கோயிலுக்கு 5,000 ரூபாய் வீதம் சடங்குகளுக்கு (தூப தீப நைவேத்தியம்) நிதியுதவிக்காக இந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 28 கோடி ரூபாயில் 15 கோடி ரூபாய் செலவிடப்பட்டது" என்றார்.
சமீப காலமாக, தென் மாநிலங்களை குறிவைத்து பாஜக செயல்பட்டு வரும் நிலையில், ஜெகம் மோகன் ரெட்டியின் இந்த நகர்வு அரசியல் ரீதியாக பார்க்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பல்வேறு முயற்சிகளை பாஜக செய்து வரும் நிலையில், அதற்கு பதிலடியாக இந்த ஜெகன் மோகன் ரெட்டி இந்த முடிவை எடுத்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.