Andhra Pradesh Farmer: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் கான்வாயை மறித்த விவசாயிகள்… வைரலாகும் வீடியோ! என்ன காரணம்?
தும்பற்றி, மோட்டுமருது பகுதிகளில் ஏழை மக்களுக்கு வீட்டு மனைகள் வழங்குவதற்காக 210 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய அதிகாரிகள், இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி புதன்கிழமை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விமான நிலையத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அனந்தபூர் அருகே மனுக்களை கையில் வைத்துக்கொண்டு விவசாயிகள் அவரை தடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நில கையகப்படுத்துதலில் அதிருப்தியடைந்த விவசாயிகள் கான்வாயை மறிக்க முயன்றதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஜெகன் மோகன் வாகனத்தை மறித்த விவசாயிகள்
சிங்கனமாலா தொகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு புட்டபர்த்திக்கு சென்று கொண்டிருந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கான்வாயை மறித்து, அனந்தபூர் மாவட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தும்பற்றி, மோட்டுமருது பகுதிகளில் ஏழை மக்களுக்கு வீட்டு மனைகள் வழங்குவதற்காக 210 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய அதிகாரிகள், இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
#WATCH आंध्र प्रदेश: किसानों ने मुख्यमंत्री वाईएस जगन मोहन रेड्डी के काफिले को अनंतपुर जिले में रोकने का प्रयास किया। (26.04) pic.twitter.com/3vdegqnbIW
— ANI_HindiNews (@AHindinews) April 27, 2023
தடுத்த எஸ்கார்ட் காவல் அதிகாரிகள்
வீடியோவில், முதல்வரின் வாகன கான்வாயை மறித்த விவசாயிகளை கண்டதும் முன்னாள் சென்ற எஸ்கார்ட் வாகன காவல் துறையினர் இறங்கி வந்து அப்புறப்படுத்த முயல்வது தெரிகிறது. ஆனால் அவர்களிடம் சிக்காமல் அங்கிருந்து ஓடி முதல்வர் வாகனத்தை அடைய முயற்சிக்கின்றனர் விவசாயிகள். பின்னர் விவசாயிகளை சந்தித்த, தர்மாவரம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ கேத்தி ரெட்டி வெங்கட்ராமி ரெட்டி, இவர்களுக்கு இழப்பீடு வழங்கத் தவறியதற்காக வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் மனு கொடுக்க வந்தபோது, போலீஸார் தங்களைத் தள்ளிவிட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
ஜெகனன்னா வித்யா தீவேனா
இதற்கிடையில், புதன்கிழமை காலை ஜெகன் மோகன் ரெட்டி, அனந்தபூர் மாவட்டத்திற்குச் சென்று மாணவர்களின் தாய்மார்களின் கணக்குகளில் "ஜெகனன்னா வித்யா தீவேனா" திட்டத்தின் நிதியை வெளியிட்டார். இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 9,55,662 மாணவர்களின் தாய்மார்களின் கணக்கில் ரூ.912 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு 10 ஆயிரமும், ஐடிஐ மாணவர்களுக்கு ரூ. 15 ஆயிரமும், பட்டம், பொறியியல், மருத்துவம் மாணவர்களுக்கு ரூ. தலா 20 ஆயிரமும் நிதியுதவி வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, கல்விக்காக யாரும் கடன் வாங்கக் கூடாது என்பதே தங்களது எண்ணம். அதனால் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு நிதியுதவி செய்து வருகிறோம். ஒய்சிபி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, கல்வித்துறையில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு, பள்ளிகளின் வடிவம் நாளுக்கு நாள் மாற்றப்பட்டு வருவதாக முதல்வர் ஜெகன் தெரிவித்தார்.
“கல்வி ஒரு குடும்பத்தின் வரலாற்றை மட்டுமல்ல, அந்த குடும்பத்தின் சமூக வகுப்பையும் மாற்றுகிறது என்று கூறப்படுகிறது. வறுமையின் தளைகளை உடைக்கும் ஒரே ஆயுதம் கல்வி. படிப்பால் யாரும் கடனில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வி வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.அதனால் தான் தரமான கல்விக்காக புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம்," என விளக்கினார்.