Orange Alert: வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்! ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை - நடுங்கும் மக்கள்
வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கடும் பனிமூட்டம் காரணமாக வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Dense to very dense fog conditions likely to continue to prevail over North India during next 3 days and improve thereafter.@moesgoi @DDNewslive @ndmaindia @NHAI_Official pic.twitter.com/zkQ3TOWL1v
— India Meteorological Department (@Indiametdept) January 17, 2024
ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கடும் பனிமூட்டம் இருக்கும். குறிப்பாக வட மாநிலங்களில் அதிகமாக இருக்கும். எதிரில் வருபவர்கள் கூட தெரியாத அளவு கடும் பனிமூட்டம் இருக்கும். இதனையடுத்து கடந்த சில வாராங்களாக வட மாநிலங்களில் கடும் பனி நிலவுகிறது. ஒரு சில பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவால் ஆரஞ்ச் அலர்ட்:
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அடுத்த 5 நட்களுக்கு வடமேற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிக அதிகப்படியான பனிப்பொழிவு இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் வெப்பநிலை குறைந்து பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மாவட்டம் வாரியாக ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகப்படியான பனிப்பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், டெல்லி, சண்டிகர், பஞ்சாப், ஹரியானா ஆகிய பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. உத்திர பிரதேசத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறந்துள்ள நிலையில், வரும் நாட்களில் பனிப்பொழிவு குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், தலைநகர் டெல்லிக்கு அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரும் 19 மற்றும் 20 ஆம் தேதி மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரயில்கள் தாமதம்:
வானிலை துறையின் முன்னறிவிப்பின்படி, தில்லியில் இன்றும் நாளையும் காலை நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் கூடிய வானம் அடர்ந்த பனிமூட்டத்துடன் காணப்படும். அதன்பிறகு, டெல்லியில் ஜனவரி 21-ம் தேதி வரை தெளிவான வானத்துடன் மிதமான மூடுபனி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகரில் கடந்த சில நாட்களாக அடர்ந்த பனிமூட்டம் நிலவுகிறது. திங்கள்கிழமை, டெல்லியில் 200 மீட்டருக்கும் குறைவான தூரம் வரை மட்டுமே பார்க்கும் அளவு கடும் பனி இருந்தது. கடந்த நான்கு நாட்களாக, குறைந்தபட்ச வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. ஜனவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.5 டிகிரி செல்சியஸாகவும், கடந்த சனிக்கிழமை 3.6 டிகிரி செல்சியஸாகவும், வெள்ளிக்கிழமை 3.9 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது. அடர்த்தியான மூடுபனி காரணமாக திங்கள்கிழமை டெல்லி செல்லும் ரயில்கள் 18 மணிநேரம் தாமதமாக வந்ததாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.