Pegasus Spyware: பெகசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்திற்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவிவிலக வேண்டும் - ராகுல்காந்தி
ஆயுதங்களை பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்துவார்கள், ஆனால் பிரதமரும், உள்துறை அமைச்சரும் மாநிலங்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக பயன்படுத்தி உள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள பெகசஸ் என்ற உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள், நீதிபதிகள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டு உளவு பார்க்கப்பட்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சர்வதேச பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியானது. பெகசஸ் உளவு மென்பொருளை கொண்டு தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்ட ஏராளமானோரின் தொலைபேசிகளும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியானது, இதற்கு மத்திய அரசும் மறுப்பு தெரிவித்துள்ளது.
ரஃபேல் விமான முறைகேடு விவகாரத்தில் பிரான்ஸை சேர்ந்த பத்திரிக்கையாளர்களும் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் இது குறித்து விசாரிக்க பிரான்ஸ் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக பெகாசஸ் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விவாதிக்க சத்தீஸ்கர் அரசும் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்த மதசார்பற்ற ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கலைப்பதற்காக பெகாசஸ் மென்பொருள் கருவி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஷ்வர் குற்றம்சாட்டி இருந்தார்.
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் கடந்த 4 நாட்களாக நாடாளுமன்றத்தில் எதிரொளித்து வருகிறது. எதிர்க்கட்சிகள் பெகசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து அவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிடக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி,
அனைத்து தரப்பினரையும் உளவு பார்க்க பெகாசஸ் மென் பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுக் கேட்பு விவகாரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவிவிலக வேண்டும். ரஃபேல் விசாரணையை தடுக்க பெகாசஸ் மென் பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊழலுக்கு பிரதமரே பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என்றார்.
பெகசஸ் உளவு மென்பொருள் என்பது ஒரு ஆயுதம் போன்றது; ஆயுதங்களை பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்துவார்கள், ஆனால் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக பயன்படுத்தி உள்ளனர். பெகசஸ் மென்பொருளை கர்நாடகா, உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த உளவு பார்த்தலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவிவிலக வேண்டும்.
இது ராகுல்காந்தி என்ற தனிநபர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல; இந்திய மாநிலங்கள் மீதும், இந்திய அமைப்புகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே பார்க்கவேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.