பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் : அம்ரீந்தர் சிங் கட்சி - பா.ஜ.க. கூட்டணி.. அப்டேட்ஸ் என்ன?
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்காக அம்ரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பஞ்சாபில் சட்டமன்ற தேர்தல் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்துவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் காங்கிரசில் இருந்து விலகி, கடந்த மாதம் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். இந்த நிலையில், அவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், பஞ்சாபின் முன்னாள் முதல்வரும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அம்ரீந்தர் சிங் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வுடனும், சுக்தேவ் சிங் தின்சாவின் சிரோமணி அகாலி தளம் கட்சியுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அறிவித்தார். சண்டிகரில் இன்று பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியின் அலுவலத்தை திறந்து வைத்து, இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அம்ரீந்தர் சிங், “ நமது இலக்கு பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது. நாம் வெல்வோம்” என்று கூறினார். அம்ரீந்தர் சிங்கின் இந்த அறிவிப்பால் இப்போதே. பஞ்சாபில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
முன்னதாக, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு காங்கிரசில் இருந்து விலகிய அம்ரீந்தர் சிங் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது. அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததும் பா.ஜ.க.வில் இணைவது உறுதி என்றெல்லாம் தகவல்கள் வெளியானது.
ஆனால், அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். அவர் பா.ஜ.க.வுடன்தான் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது போலவே, அவர் இன்று தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பஞ்சாப் தேர்தலில் தற்போது ஒரு கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளனர்.
கடந்த 2017ம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் 77 இடங்களிலும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட அகாலிதளம் 18 இடங்களிலும், பா.ஜ.க. 3 இடங்களிலும், ஆம் ஆத்மி 20 இடங்களிலும், பிற கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. மொத்தம் 117 சட்டமன்ற இடங்களை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் தற்போது சரண்ஜித்சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்