மணிப்பூர் நிலவரத்தை ஆய்வு செய்த அமித் ஷா.. மேலும் 10 கம்பெனி மத்திய படைகள் அனுப்பிவைப்பு
இனக்கலவரத்தால் மணிப்பூர் மாநிலம் பற்றி எரியும் சூழலில் அங்கு நிலவரத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆன்லைன் மூலம் ஆய்வு செய்தார்.
இனக்கலவரத்தால் மணிப்பூர் மாநிலம் பற்றி எரியும் சூழலில் அங்கு நிலவரத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆன்லைன் மூலம் ஆய்வு செய்தார். முதல்வர் பைரன் சிங்குடன் காணொலி மூலம் ஆலோசித்த அவர் 10 கம்பெனி மத்திய படைகள் அணிப்புவைப்பதாக அறிவித்தார்.
ஒரு கம்பெனியில் 100 பேர் என மொத்தம் 1000 பேர் மணிப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூர் கலவரம் காரணமாக அதை கூர்ந்து கவனித்து வருவதால் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடத்தப்பட்ட பழங்குடியினர் ஒற்றுமை பேரணியில் வன்முறை வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரின் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் நடத்திய ஒற்றுமை பேரணி கலவரமாக மாறியது எப்படி? எதற்காக இந்த பேரணி நடத்தப்பட்டது? என்பது குறித்து கீழே காணலாம்.
போராட்டக்களமாக மாறிய மணிப்பூர்:
மணிப்பூரை பொறுத்தவரையில் அங்கு எண்ணிக்கையின் அளவில் மிக பெரிய சமூகமாக இருப்பது மெய்டீஸ் சமூகம். மணிப்பூரில் 34 அங்கீகரிக்கப்பட்ட பழங்குடி பிரிவுகள் உள்ளன. இவர்கள், 'குக்கி பழங்குடியினர்', 'நாகா பழங்குடியினர்' என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மாநிலத்தின் உள்ள மத்திய பள்ளத்தாக்கு, மணிப்பூரின் நிலப்பரப்பில் சுமார் 10 சதவிகிதம் ஆகும். மாநிலத்தின் மக்கள்தொகையில் 64.6 சதவிகிதம் ஆக இருக்கும் மெய்டீஸ் மற்றும் மெய்டீஸ் பங்கில் சமூக பிரிவின் தாயகமாக இந்த பள்ளத்தாக்கு பகுதி விளங்குகிறது.
மாநிலத்தின் நிலப்பரப்பு பகுதியின் மீதமுள்ள 90 சதவிகிதம் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள மலைகளை உள்ளடக்கியது. இது அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியினரின் தாயகமாகும். இந்த பழங்குடியினர், மாநிலத்தின் மக்கள்தொகையில் 35.4 சதவிகிதமாக இருக்கின்றனர்.
சர்ச்சைக்கு வித்திட்ட உயர் நீதிமன்ற உத்தரவு:
இப்படிப்பட்ட சூழலில், மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல், மெய்டீஸ் சமூகத்தினர், இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
மெய்டீஸ் சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலத்தின் பழங்குடியினர் நீண்ட காலமாக எதிர்க்கின்றனர். மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் 40 தொகுதிகள் பள்ளத்தாக்கில் இருப்பதால், மக்கள்தொகை மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் இரண்டிலும் மெய்டீஸ் ஆதிக்கமே இருப்பதாக பழங்குடியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் மெய்டீஸ் பழங்குடி சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்திய அரசியலமைப்பில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தை சேர்ப்பதற்கான பரிந்துரையை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது.
பழங்குடியினரின் கோரிக்கைதான் என்ன?
"மனுப்பூரில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தை சேர்க்க மனுதாரர்கள் மற்றும் பிற சங்கங்கள் நீண்ட வருடங்களாக போராடி வருகின்றன" என்று கூறிய நீதிமன்றம், மனுதாரர்களின் வழக்கை பரிசீலித்து அதன் பரிந்துரையை சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் நான்கு வார காலம், அவகாசம் வழங்கியது மணிப்பூர் உயர் நீதிமன்றம்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, பழங்குடியினர் பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எஸ்டி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற மெய்டீஸ் சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு எதிராக பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் வன்முறை வெடிக்க மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது.
இம்பால், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி ஆகிய இடங்களில் வன்முறை வெடித்ததை அடுத்து மணிப்பூரின் 8 மாவட்டங்களில் நேற்று இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மணிப்பூர் அரசும் மாநிலத்தில் இணைய வசதியை நிறுத்தியது. இதையடுத்து, நிலைமையை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டது.