Amit Shah: தன் மீது வெளிச்சம் படுவதை விரும்பாத ஹீரோ... அமித் ஷாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்நாத் சிங்!
"அமித் ஷா ’மேடைக்கு பின்னே திகழும் ஹீரோ’ என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் தன்னை முன்னிறுத்த ஆசைப்படவில்லை. ஆனால் தன்னை பின்னணியில் நிலைநிறுத்தி அரசுக்கும் கட்சிக்கும் பல பெரிய செயல்களை செய்கிறார்"
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ”வெளிச்சத்தை விரும்பாத, மேடைக்கு பின்னே திகழும் ஹீரோ” என்றும், வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள் இருந்தபோதிலும் தனது கடமைகளை தவறாமல் செய்தவர் என்றும் புகழ்ந்துள்ளார்.
அமித் ஷாவின் உரைகள் அடங்கிய தொகுப்பான ’சப்தன்ஷ்’ எனும் புத்தகத்தை முன்னதாக ராஜ்நாத் சிங் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், ”உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசியல் மற்றும் ஆன்மீகத்தின் அரிய கலவையை ஒருங்கிணைத்துள்ளார். அவரது இந்த ஆய்வு பலரையும் ஆச்சரியப்படுத்தக்கூடியது.
அமித் ஷா ’மேடைக்கு பின்னே திகழும் ஹீரோ’ என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் தன்னை முன்னிறுத்த ஆசைப்படவில்லை. ஆனால் தன்னை பின்னணியில் நிலைநிறுத்தி அரசுக்கும் கட்சிக்கும் பல பெரிய செயல்களை செய்கிறார். இன்னும் அவருக்கு படிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
Delhi | Defence Minister Rajnath Singh launched the book 'Shabdansh', written by Shivanand Diwedi, a compilation of selected speeches of Home Minister Amit Shah. pic.twitter.com/0l4fJLJDdT
— ANI (@ANI) August 10, 2022
தொடர்ந்து பேசிய அவர், ”அமித்ஷாவின் வாழ்க்கை ஆய்வுக்கூடம் போன்றது. அதில் இனிப்பும் கசப்புமான நினைவுகள் கலந்தே இருந்தன. சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கிலிருந்து அமித் ஷா பல மாதங்கள் சிறையில் இருக்க வேண்டியிருந்தது” என்று ராஜ்நாத் சிங் வேதனை தெரிவித்தார்.
”அமித் ஷா, விசாரணை அமைப்புகள் தம்மை அழைக்கும் இடங்களிலெல்லாம் சென்று கூச்சலிடவில்லை, கலவரத்தை எழுப்பவில்லை. ஒவ்வொரு சவாலும் அவரை வலிமையாக்கியது. பாராட்டு அல்லது இழிவு பற்றி கவலைப்படாமல், அவர் தனது கடமைகளின் பாதையில் நடந்தார்.
அரசியல் மற்றும் ஆன்மீகத்தின் கலவையை நாம் அரிதாகவே பெறுகிறோம், அது அமித் ஷாவிடம் உள்ளது. அரசியல் என்பது சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டது. ஆனால் அந்த வார்த்தை அதன் அர்த்தத்தை இழந்து விட்டது. மக்கள் அதையும் அரசியல்வாதிகளையும் எதிர்மறையான பார்வையில் பார்க்கிறார்கள், அமித் ஷா அதன் உண்மையான இலக்கை மீட்டெடுக்க உழைக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
தன்னை விட 14 வயது இளையவரான அமித் ஷாவின் புத்தகத்தை வெளியிட்ட ராஜ்நாத் சிங், ”என் இளைய சகோதரரின் புத்தகத்தை வெளியிடுவதை விட மகிழ்ச்சியான அனுபவம் வேறு இருக்க முடியாது. இது ஆன்மீக மற்றும் வரலாற்று ஆளுமைகள் குறித்த விஷயங்களில் அவர் ஆற்றிய உரைகளின் குறிப்பிடத்தக்க தொகுப்பு.
இந்நூலில் இடம் பெற்றுள்ள அவரது உரைகள், நாட்டைப் பற்றிய கொள்கை உருவாக்கம், நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்த வாசகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்