India China border tension: அருணாச்சலை சொந்தம் கொண்டாடும் சீனா: 15 பகுதிகளுக்கு பெயர் சூட்டியது!
புதிய சட்டத்தின் படி, எல்லைகளை பாதுகாப்பானவையாக மாற்றும் முழு பொறுப்பை சீன விடுதலை ராணுவம் மேற்கொள்ளும். ஒருங்கிணைந்த சீனா பற்றிய புரிதலையும், விழிப்புணர்வையும் மக்களுக்கு எடுத்த செல்ல வேண்டும்.
அருணாச்சல் பிரேதேசத்தின் 15 பெயர்களை சீனா அரசு மாற்றியமைத்துள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ நாளிதழான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, நேற்று வெளியிடப்பட்ட செய்தியில், " சீனாவின் சிவில் விவகார அமைச்சகம், அருணாச்சலப் பிரதேசத்திற்கா 'ஜாங்னான்' (அல்லது தெற்கு திபெத்) பகுதியில் உள்ள 15 இடங்களுக்கு சீன, திபெத்திய மற்றும் ரோமன் எழுத்துக்களில் தரப்படுத்தப்பட்ட பெயர்களை (Standardized Names) அறிவித்தது. இதில், எட்டு மக்கள் வசிக்கும் எட்டு பகுதிகளின் பெயர்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கு பெயர் சூட்டும் தார்மீக உரிமை சீனாவுக்கு உள்ளது. இந்த நலபரப்பை சட்டவிரோதமாக இந்தியா கைப்பற்றியுள்ளது. தற்போது, பெயர் மாற்றம் செய்யப்பட்டிருபதன் மூலம், சீனாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு வலுப்பெறும்" என்று தெரிவித்துள்ளது.
அருணாச்சல் பிரதேசத்தை ஜாங்னான் என்ற பெயரில் சீனா அழைக்கிறது. ஜாங்னான் என்றால் தெற்கு திபெத் என்று பொருள். சீனாவின் இந்த ஒருதலைபட்சமான முயற்சிகள் பலனளிக்காது என்றும், புதிய பெயர்களை கண்டுபிடித்து சூட்டுவதால் மட்டும் அந்த பகுதியை சொந்தம் கொண்டாட முடியாதும் என்றும் இந்திய வெளிவிவாகாரத் துறை தெரிவித்துள்ளது.
" இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அருணாச்சல பிரதேசம் இருக்கும். இந்த பகுதியில் உள்ள இடங்களுக்கு புனையப்பட்ட பெயர்களில் பெயர்களை வழங்குவது இந்த உண்மையை மாற்றாது" என்று வெளிவிவராகத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் மேலும் தெரிவிக்கையில், " அருநாச்ச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்பரப்பை சீனா பெயர் மாற்றம் செய்வது இது முதல் முறையல்ல. கடந்த 2017ம் ஆண்டு, தலாய் லாமாவின் இந்திய வருகைக்குப் பின் சீனா பெயர் மாற்றம் செய்தது" என்று தெரிவித்தார்.
இந்தியாவும், சீனாவும் எல்லைப் பிரச்சினைகள் தொடர்பாக நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுவரை இன்னும் தீர்வு காணப்படவில்லை. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்தியா-சீனா கிழக்கு எல்லைப் பகுதியில் சுமார் 90,000 ச.கி.மீ பகுதியும் தன்னுடையது என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 38,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சார் மாநிலங்களவையில் அளித்த அறிக்கையில் தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், 5,180 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை “சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் 1963-ன்” படி பாகிஸ்தான் சீனாவுக்கு சட்ட விரோதமாக கொடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
புதிய நில எல்லைச் சட்டம் :
சீனாவின் புதிய நில எல்லைச் சட்டம் நாளைய தினத்தில் இருந்து அமலுக்கு வரும் நிலையில், சீனா இந்த பெயர் மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது. சீனாவின் இந்த புதியச் சட்டம், எல்லையில் பதற்றமான சூழலை மேலும் அதிகரிக்கும் என்று இந்தியா கருத்து தெரிவித்திருந்தது. புதிய சட்டத்தின் படி, எல்லைகளை பாதுகாப்பானவையாக மாற்றும் முழு பொறுப்பை சீன விடுதலை ராணுவம் மேற்கொள்ளும். இருப்பினும், எல்லை நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின்படியே ராணுவம் தனது எல்லைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒருங்கிணைந்த சீனா பற்றிய புரிதலையும், விழிப்புணர்வையும் மக்களுக்கு எடுத்த செல்ல வேண்டிய நடவடிக்கையை சீனா அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக் பகுதியில் இந்திய- சீன படைகளுக்கு இடையே கடுமையான மோதல் போக்கு வரும் நிலையில், சீனாவின் இந்த புதிய சட்டம் இந்தியாவை கவலை கொள்ள செய்தது.
கடந்த ஆண்டு மே மாத தொடக்கத்தில், கல்வான் பள்ளத்தாக்கில் சீனப்படையினர் இடையூறு செய்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மே மாத மத்தியில், மேற்கு பகுதியில் கொங்கா லா, கோக்ரா, பான்காங் ஏரியின் வடகரை ஆகிய இடங்களில், சீனத்தரப்பு இந்திய எல்லைக்குள் ஊடுருவ பல முறை முயற்சிகள் மேற்கொண்டன.
ஆகஸ்ட் மாத இறுதியில் சீன ராணுவம் பான்காங் ஏரியின் தென்கரைப் பகுதியில் மீண்டும் ஊடுருவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது, எல்லைப் பகுதியில் மிகவும் அத்துமீறல் போக்கை கடைபிடிக்கும் சீன ராணுவத்தின் கரங்களை இந்த புதிய சட்டம் மேலும் வலுவூட்டுவதாக அமைகிறது.