இந்த நிலைமை இப்படியே இருக்க போறதில்லை...ஏழாம் வகுப்பு மாணவருக்கு அமர்த்தியா சென் பதில்...!
"மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வேறுபாடுகள் களையப்பட வேண்டும். நமக்குள் இருக்கும் இடைவெளியை குறைக்க வேண்டும்"
இந்தியாவில் தற்போது நிலவும் சகிப்பின்மை நீண்ட காலம் நீடிக்காது. அதற்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என பொருளாதாரத்தில் நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதிச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அமர்த்தியா சென் கலந்து கொண்டார். மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சென் பதில் அளித்து பேசினார்.
அப்போது, நாட்டில் நிலவி வரும் சூழல் குறித்து விரிவாக பேசிய அவர், "இந்த நிலை நீண்ட காலம் நீடிக்காது. மக்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால் அல்லது மற்றவர்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் அடிக்கப்படுகிறார்கள்.
மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வேறுபாடுகள் களையப்பட வேண்டும். நமக்குள் இருக்கும் இடைவெளியை குறைக்க வேண்டும்" என்றார்.
ஏழாம் வகுப்பு மாணவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "பன்முகத்தன்மை எப்போதும் நல்லதா? சமீப காலமாக, இந்தியாவில் முன்பு இல்லாத பன்முகத்தன்மை உள்ளது. பன்முகத்தன்மையின் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டையும் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது" என்றார்.
நாட்டின் பன்முகத்தன்மையை காப்பாற்றுவது எப்படி என ஆசிரியர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சென், அண்ணல் காந்தி அடிகளின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி பேசினார். "சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில், நமக்குள் இருக்கும் இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்று காந்தி கூறினார்.
மற்றவர்களை மதிக்கும் திறன் குறைந்து வருகிறது. மேலும் நாம் பின்தங்குவதற்கு இதுவும் ஒரு காரணம்" என்றார்.
இதை தொடர்ந்து, பேசியய திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சுகேந்து சேகர் ராய், "அவரது கருத்தை வரவேற்கிறோம். மதம், ஜாதி, பாலினம் மற்றும் மொழியின் அடிப்படையில் ஒட்டுமொத்த நாட்டையும் பாஜக பிரிக்கும் சூழ்நிலையை அவர் உண்மையில் விமர்சிக்கிறார்" என்றார்.
பின்னர், பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முகமது சலிம், "அவர் ஒரு உண்மையான சிந்தனையாளர் என்ற புரிதலை வெளிப்படுத்தி இருக்கிறார். ரவீந்திரநாத் தாகூர் போன்றவர்களிடமிருந்து இந்தியா கற்று கொண்ட பன்மைத்துவம் ஒற்றுமை பாரம்பரியத்தின் தீபமாகும்" என்றார்.
அமர்த்தியா சென் கருத்தை விமர்சித்து பேசிய பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ், "அவர் ஒரு பொருளாதார நிபுணர். ஆனால், அவர் பொருளாதாரம் பற்றி ஏதாவது சொன்னாரா? இப்போது உலகளவில் வலுவாக உருவெடுத்துள்ள இந்தியாவைப் பற்றி சென் சிந்திக்க வேண்டியதில்லை.
ஆனால், வங்காளத்தில் இந்த நிலை நீண்ட காலம் நீடிக்காது. சென் இங்கே ஒரு மாற்றம் இருக்கும் என்பதை அறிந்திருக்க வேண்டும்" என்றார்.