International Flight Update: சர்வதேச விமான பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த மத்திய அரசு
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக வரும் சூழலில் சர்வதேச விமான பயணிகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதன் ஒருபகுதியாக சர்வதேச விமான பயணிகளுக்கு தற்போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கட்டுப்பாடு விதிகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒமிக்ரான் பரவல் அதிகம் இல்லாத நாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அதன்பின்னர் 8ஆவது நாளில் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அந்தப் பரிசோதனையில் தொற்று உறுதியாகிவிட்டால் அவர்களுடைய மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஒமிக்ரான் பரவல் அதிகமாக உள்ள நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு வந்தவுடன் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அந்த நபர்களுக்கு தொற்று உறுதியாகவில்லை என்றால் அவர்களும் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பின்னர் அவர்களுக்கும் இனிமேல் 8ஆவது நாளில் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கொரோனா பரவல் அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்படும். அந்தப் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதியாகிவிட்டால் அவர்கள் 7 நாட்கள் மட்டும் தனிமைப்படுத்தி கொண்டால் போதுமானது. ஆனால் தற்போது அந்த 7 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு கொரோனா பரிசோதனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இவை தவிர ஏற்கெனவே அமலில் உள்ள சில விதிமுறைகளும் சர்வதேச விமான பயணிகளுக்கு தொடர்ந்து பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆரோக்ய சேது செயலியை வைத்திருந்தல், விமானப்பயணம் தொடர்பான முழு விவரங்களை அளித்தல் ஆகியவை தொடர்ந்து அமலில் இருக்கும். அதேபோல் ஒமிக்ரான் தொற்று அதிகம் இல்லாத நாடுகளிலிருந்து வருபவர்களில் 2 சதவிகிதம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவது தொடர்ந்து நடைபெறும் என்றும் மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் தொற்று வகைகள் மீண்டும் வேகமாக பரவி வருகின்றன. இதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வாரத்தின் இறுதி நாட்களில் ஊரடங்கு எனப் பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கியுள்ள சூழலில் மத்திய அரசு இந்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: “கொஞ்ச நாள் பொறுங்க” - பிரதமர் பாதுகாப்பு விசாரணைக் குழுக்களை தடுத்து நிறுத்திய உச்சநீதிமன்றம்