Emergency Landing: ராகுல் காந்தி, சோனியா காந்தி சென்ற விமானம்.. அவசர அவசரமாக தரையிறக்கம்.. போபாலில் நடந்தது என்ன?
ராகுல் காந்தி, அவரின் தாயார் சோனியா காந்தி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, டெல்லிக்கு விமானம் மூலம் கிளம்பினர்.
நாடு முழுவதும் உள்ள 26 கட்சிகள் கலந்து கொண்ட எதிர்க்கட்சிகளின் கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று தொடங்கி இன்று நிறைவடைந்தது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அவரின் தாயார் சோனியா காந்தி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, டெல்லிக்கு விமானம் மூலம் கிளம்பினர்.
ராகுல் காந்தி, சோனியா காந்தி சென்ற விமானத்திற்கு என்னாச்சு?
ஆனால், அவர்கள் சென்ற விமானம் இன்று மாலை மோசமான வானிலை காரணமாக போபால் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் இரவு 7.45 மணியளவில் நடந்துள்ளது. இன்று இரவே விமானம் மீண்டும் டெல்லியை நோக்கி விமானம் புறப்படும் என தெரிகிறது. தகவல் அறிந்த மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பி.சி.சர்மா, எம்.எல்.ஏ குணால் சவுத்ரி உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு சென்றனர்.
முன்னதாக, எதிர்க்கட்சிகளின் இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு என்ன பெயர் வைப்பது குறித்து தலைவர்களிடையே ஆலோசனை நடைபெற்றது. அதன்படி, கூட்டணிக்கு இந்தியா (I-N-D-I-A) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய இரவு விருந்து கூட்டத்தில், அனைத்து அரசியல் கட்சிகளும் பெயர்களை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி, கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள், என்ன பெயர் வைப்பது குறித்து ஆலோசனை நடத்தி இந்தியா என்ற பெயரை இறுதி செய்துள்ளனர்.
பெங்களூருவில் நடைபெற்ற மெகா கூட்டம்:
கூட்டணிக்கு பதில் முன்னணி என்ற வார்த்தையை பெயரில் சேர்க்க இடதுசாரி கட்சிகள் விரும்பியதாகவும், அதேபோல கூட்டணியின் பெயரில் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற வார்த்தை இடம்பெறுவதை தவிர்க்க சில கட்சிகள் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி என பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, "இந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்வது பெருமையாக இருக்கிறது. இந்தியா என்ற கருத்தாக்கம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. கோடிக்கணக்கான இந்தியர்களின் குரல் பறிக்கப்படுகிறது.
இது இந்தியாவின் குரலை மீட்டெடுப்பதற்கான போராட்டம். அதனால்தான், இந்த பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளோம் - இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா). தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இந்தியாவுக்கும், நரேந்திர மோடிக்கும் இந்தியாவுக்கும், அவர்களின் சித்தாந்தத்துக்கும் இந்தியாவுக்கும் இடையேயான போர்தான் இது" என்றார்.