"விசாரணையின் முடிவில் உண்மை வெளிவரும்" விமான விபத்து குறித்து டாடா குழு தலைவர் சந்திரசேகரன் பளீச்
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் பிஜே மருத்துவக் கல்லூரியின் விடுதி கட்டித்தரப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது.

விமான விபத்து தொடர்பாக ஏராளமான யூகங்கள் பரப்பப்படுகின்றன என்றும் விசாரணையில் முடிவில் உண்மை தெரிய வரும் என்றும் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
உலகை ஷாக்கில் ஆழ்த்திய விமான விபத்து:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து டேக் ஆஃப் ஆகும்போது, விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. அந்த விமானம், பிஜே மருத்துவக் கல்லூரியின் விடுதியில் விழுந்தது.
விமானத்தில் பயணம் செய்த ஒருவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய நிலையில், மற்ற அனைவரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. விபத்தின் காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. ஆனால், விபத்து குறித்து பல்வேறு விதமான சர்ச்சை கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
"உண்மை தெரிய வரும்"
இந்த நிலையில், விசாரணையின் முடிவில் உண்மை தெரிய வரும் என டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "உங்களைப் போலவே, என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம் என்று நான் கூற விரும்புகிறேன்.
இப்போது எங்களுக்குத் தெரியாது. கடந்த 24 மணி நேரத்தில், இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து புலனாய்வுக் குழுக்கள் விபத்து குறித்து விசாரிக்க அகமதாபாத்திற்கு வந்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியும்.
அவர்களுக்கு எங்கள் முழு ஒத்துழைப்பு உள்ளது. மேலும், கண்டுபிடிப்புகள் குறித்து நாங்கள் முற்றிலும் வெளிப்படையாக இருப்போம். எங்கள் விமானிகள் மற்றும் குழுவினர் மற்றும் உங்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். டாடா குழுமம் சமூகத்திற்கான தனது பொறுப்பை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. அதில் நேற்று என்ன நடந்தது என்பது குறித்து வெளிப்படையாக இருப்பதும் அடங்கும்.
நம்மைச் சுற்றி ஏராளமான ஊகங்கள் உள்ளன. அவற்றில் சில சரியாக இருக்கலாம். சில தவறாக இருக்கலாம். நான் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் பிஜே மருத்துவக் கல்லூரியின் விடுதி கட்டித்தரப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: NEET Cut Off Marks 2025: நாளை வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்; யார் யாருக்கு எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண் தேவை?





















