காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முக்கிய தலைவர்கள்...யார் யார்?
சமீப காலமாகவே, மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் மோசமான தோல்வியை சந்தித்த பிறகு, காங்கிரஸின் இளம் மற்றும் முக்கிய தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி பிற கட்சிகளில் இணைந்து உள்ளனர்.
மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளில் இருந்தும் வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்து, கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு ஐந்து பக்க ராஜிநாமா கடிதத்தை அனுப்பி உள்ளார்.
சமீப காலமாகவே, மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் மோசமான தோல்வியை சந்தித்த பிறகு, காங்கிரஸின் இளம் மற்றும் முக்கிய தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி பிற கட்சிகளில் இணைந்து உள்ளனர். பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் கட்சி மாறி உள்ளனர். கட்சி மாறிய பலர் இப்போது தாங்கள் சேர்ந்த கட்சிகளில் அமைச்சர்களாகவோ அல்லது எம்பிக்களாகவோ
மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், 39 வயதான ஜெய்வீர் ஷெர்கில் ராஜினாமா செய்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார். ஆசாத் அதன் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து கட்சிப் பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். ஏற்கனவே, பல தலைவர்கள் கட்சியில் இருந்து விலகிய நிலையில், மூத்த தலைவர் ஒருவர் விலகி இருப்பது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பேரிடியாக விழுந்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதிய 5 பக்க கடிதத்தில், கனத்த இதயத்துடன் ராஜினாமா செய்கிறேன் என குலாம் நபி ஆசாத் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியில் இருந்து விலகிய முக்கிய தலைவர்கள் குறித்து காண்போம்.
ஜோதிராதித்ய சிந்தியா
2018 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர உதவிய ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியுடனான தனது 18 ஆண்டுகால தொடர்பை முடித்துக் கொண்டார். மாநிலத்தில் கட்சித் தலைமையுடன் சண்டையிட்டதற்காக மார்ச் 2020 இல் ராஜினாமா செய்தார் சிந்தியா. அவரின் ஆதரவாளர்கள் 20 எம்எல்ஏக்கள் தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் கமல்நாத் அரசு கவிழ்ந்தது.
பின்னர், பாஜகவில் இணைந்த சிந்தியாவுக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட்டது. 2021 இல் அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகு, அவர் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவரது தந்தையும் மறைந்த காங்கிரஸ் தலைவருமான மாதவராவ் சிந்தியா 1991 முதல் 1993 வரை விமான போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த மாதம், ஆர்சிபி சிங் வகித்து வந்த எஃகு அமைச்சகம் அவருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
ஜிதின் பிரசாத்
ஜிதின் பிரசாதா, உத்தரபிரதேசத்தில் காங்கிரஸின் பிராமண சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் முக்கிய தலைவராக இருந்தார். இளைஞர் காங்கிரஸில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரசாத், 2004 இல் முதல் முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்தார்.
காங்கிரஸ் அவரை 2021 மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது. ஆனால், மேற்கு வங்கத்தில் அக்கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்தது. ஜூன் 2021 இல், பிரசாதா பாஜகவில் சேர்ந்தார். பின்னர், மாநில அமைச்சரவையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
ஹர்திக் படேல்
ஹர்திக் படேல், 2015இல் படேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க கோரிய போராட்டத்தின் ஒரு முகமாக உருவெடுத்தார். மேலும் சில அரசியல் நிபுணர்களால் குஜராத் அரசியலின் எதிர்காலம் என்றும் கணிக்கப்பட்டார். இருப்பினும், போராட்டத்திற்குப் பிறகு, அவரால் பெரிய தலைவராக உருவெடுக்க முடியவில்லை.
2019இல் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸில் சேர்ந்தார். ஆனால் குஜராத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. அவரால் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஒரு அரசியல் தலைவராக உருவெடுத்து, காங்கிரஸுடன் மூன்றாண்டு காலம் பணியாற்றிய பிறகு, 28 வயதான படேல், இந்த ஆண்டு ஜூன் மாதம் பாஜகவில் சேர்ந்தார். இது வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான வாய்ப்பை உருவாக்கி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், படேலுக்கு பாஜக இதுவரை எந்தப் பொறுப்பையும் வழங்கவில்லை.
சுஷ்மிதா தேவ்
நேரு குடும்பத்திற்கு நெருக்கமானவராகக் கருதப்படும் சுஷ்மிதா தேவ், 2021 இல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தபோது, காங்கிரஸின் மகளிர் பிரிவு தேசியத் தலைவராக இருந்தார். அசாமில் கட்சியின் முக்கிய முகங்களில் இவரும் ஒருவர். ஒரு முறை எம்பியாக பதவி வகித்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் சில்சார் தொகுதியில் தோல்வி அடைந்தார். பின்னர், ஆகஸ்ட் 2021 இல், அவர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தார். பின்னர், மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.