Aditya L1 Selfie: செல்பி எடுத்து அனுப்பிய ஆதித்யா விண்கலம்.. பூமியின் பிரம்மாண்டத்தில் கடுகளவு நிலவு
ஆதித்யா எல் 1 விண்கலம் எடுத்த செல்பி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம், செல்பி எடுத்து அனுப்பியுள்ளது. அதுமட்டும் இன்றி, பூமி மற்றும் நிலவின் புகைப்படங்களை அனுப்பியுள்ளது.
ஆதித்யா எல்1 விண்கலம்:
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம், கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, சுமார் 125 நாட்கள் சூரியனை நோக்கி பயணித்து, பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்பட உள்ளது.
நிலவை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் விண்கலத்தை விட 4 மடங்கு அதிக தூரத்தை கடந்து ஆதித்யா எல்1 விண்கலம் பயணிக்க உள்ளது. அங்கிருந்து சூரியன் தொடர்பான பல்வேறு ஆய்வுகளை ஆதித்யா எல்.1 விண்கலம் செய்ய உள்ளது. 1,485 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் வெப்பசூழல், கதிர்வீச்சு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் மட்டுமே இதுவரை சூரியனை ஆய்வு செய்ய விண்கலங்களை அனுப்பியுள்ளன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. அதோடு, நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து சூரியனையும் ஆய்வு செய்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
15 லட்சம் கி.மீ. தூரத்தை நோக்கி பயணித்து வரும் ஆதித்யா எல்1 விண்கலம், செல்பி எடுத்து அனுப்பியுள்ளது. அதுமட்டும் இன்றி, பூமி மற்றும் நிலவின் புகைப்படங்களையும் எடுத்து அனுப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோவை எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதள பக்கத்தில் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
Aditya-L1 Mission:
— ISRO (@isro) September 7, 2023
👀Onlooker!
Aditya-L1,
destined for the Sun-Earth L1 point,
takes a selfie and
images of the Earth and the Moon.#AdityaL1 pic.twitter.com/54KxrfYSwy
அந்த பதிவில், "சூரியன், பூமிக்கு இடையேயான L1 புள்ளியை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆதித்யா எல்1 விண்கலம், செல்பியையும் பூமி மற்றும் நிலவின் புகைப்படங்களையும் அனுப்பியுள்ளது" என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேற்கொள்ள உள்ள ஆய்வுகள் என்னென்ன?
பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் ஆதித்யா எல்1 விண்கலத்தில் பொருத்தப்பட்டு உள்ளன. இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய உள்ளது.
சூரியனின் ஒளி மண்டலம், நிற மண்டலம், சூரியனின் வெளிப்புற அடுக்குகள், ஒளி வட்டம் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்ய இதில் விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி விண்கலத்தில் அனுப்பப்பட்டுள்ளன.