Aditya L1 Mission: நிலவை தொடர்ந்து சூரியன்.. ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்படும் தேதியை அறிவித்த இஸ்ரோ.. திட்டப்பணிகள் என்ன?
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம், செப்டம்பர் 2 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது
விண்வெளியில் இருந்தவாறு சூரியனை ஆய்வு செய்யவுள்ள ஆதித்யா எல்1, பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
🚀PSLV-C57/🛰️Aditya-L1 Mission:
— ISRO (@isro) August 28, 2023
The launch of Aditya-L1,
the first space-based Indian observatory to study the Sun ☀️, is scheduled for
🗓️September 2, 2023, at
🕛11:50 Hrs. IST from Sriharikota.
Citizens are invited to witness the launch from the Launch View Gallery at… pic.twitter.com/bjhM5mZNrx
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. 40 நாட்கள் விண்வெளியில் பயணம் மேற்கொண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. நிலவின் தென் துருவத்தில் கால்தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமை இதன் மூலம் இஸ்ரோவிற்கு கிடைத்தது. நிலவை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ முடிவு செய்துள்ளது. அந்த திட்டம் தான் ஆதித்யா எல்1. இது தொடர்பாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆதித்யா எல்1 விண்கலம் தொலைதூர கண்காணிப்பு மூலம் சூரியனின் கரோனா (வெளிப்புற) பகுதியை ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரிய வளிமண்டலத்தையும் ஆய்வு செய்யும் வகையில் ஆதித்யா எல்1 வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் சூரியனில் இருக்கும் ஒளி மனடலம், சூரிய அடுக்குகள், அதில் இருக்கும் ஆகியவற்றையும் ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் சூரியனின் இந்த அனல்காற்று "அரோராஸ்" (auroras) என்று அழைக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக, பூமியின் காலநிலை மாற்ற முறைகளில் சூரியனின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள ஆதித்யா எல்1 வழங்கும் ஆய்வுத் தரவுகள் உதவும் என்று நம்பப்படுகிறது.
சூரியனை பற்றி ஆய்வு செய்ய விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ் (Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer) உள்ளிட்ட முக்கிய கருவிகள் ஆதித்யா எல்1 –ல் உள்ளன.
இது தொடர்பாக பேசிய முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், “இந்த பணி சூரியனை நெருங்கிய தொடர்பில் ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டது. சூரியன், பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமாகும், மேலும் இது 150 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள ஹீலியம் மற்றும் ஹைட்ரஜனின் கலவையாகும். இந்த பணியின் கண்டுபிடிப்புகள் மிகவும் பயனுள்ளதாகவும், சூரியனை பற்றிய புரிதலை மேம்படுத்தும் வகையிலும் இருக்கும்” என கூறியுள்ளார். ஏற்கனவே நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனங்கள் சூரியனை ஆய்வு செய்யும் வகையில் ஆர்பிட்டர்களை அமைத்துள்ளது. ஆனால். இந்தியாவின் இந்த திட்டம் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது மலிவானதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், ராக்கெட்டின் எக்ஸ்எல் கட்டமைப்பில் மிகவும் நம்பகமான பிஎஸ்எல்வியைப் பயன்படுத்துவதன் மூலம் இதைச் செய்ய முடியும் என்றும் பிஎஸ்எல்வி பொதுவாக செயற்கைக்கோள் ஏவுவதற்குப் பயன்படுத்தப்படும் வகையை விட மிகவும் சக்திவாய்ந்தது” என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.