Adani Issue : அதானி விவகாரம்...வெளிப்படைத்தன்மையை விரும்புகிறோம்...மத்திய அரசின் பரிந்துரையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் அதிரடி..!
அறிக்கை வெளியானதன் விளைவாக, அதானி கழுமம் பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. பங்கு சந்தையில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அதானி குழுமம் இழப்பை சந்தித்திருப்பதாக தகவல் வெளியான வண்ணம் இருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் கடந்த 2 அண்டுகளாக, அதானி குழுமத்தின் முன்னாள் நிர்வாகிகள், அதிகாரிகள், பங்குதாரர்கள் என பலரிடம் கருத்துக்களைக் கேட்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், ”அதானி குழுமம் பங்குசந்தையில் ஏராளமான மோசடி வேலைகள் செய்துள்ளது. ரூ.17.80 லட்சம் கோடி மதிப்பிலான தொகைக்கு அதானி குழுமம் பங்குச்சந்தையில் மோசடி செய்து, பங்குகளை திருத்தியுள்ளது” என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அதானி குழுமம் மறுத்துள்ளது.
ஆனால், அறிக்கை வெளியானதன் விளைவாக, அதானி கழுமம் பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. பங்கு சந்தையில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அதானி குழுமம் இழப்பை சந்தித்திருப்பதாக தகவல் வெளியான வண்ணம் இருக்கிறது.
பங்கு சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய இந்திய முதலீட்டாளர்கள் பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளனர். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இம்மாதிரியான சம்பவம் எதிர்காலத்தில் நடந்திராத வகையிலும் இந்திய முதலீட்டாளர்களை பாதுகாக்கும் நோக்கிலும் தற்போதுள்ள ஒழுங்குமுறை விதிகளை ஆராயவும் அதானி விவகாரம் குறித்து விசாரிக்கவும் நிபுணர் குழு அமைக்க பரிந்துரை செய்தது.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நிபுணர் குழுவை அமைக்க தங்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என மத்திய அரசும் செபி அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
ஆனால், நிபுணர் குழுவின் நோக்கம், அதன் உறுப்பினர்களின் பெயர்கள் ஆகியவற்றை தாங்களே பரிந்துரை செய்ய அனுமதி வழங்க வேண்டும், அதன் விவரங்களை சீல் வைக்கப்பட்ட கவரில் சமர்பிக்க மத்திய அரசும் செபி அமைப்பும் அனுமதி கோரியிருந்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில், மத்திய அரசின் பரிந்துரையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மத்திய அரசின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு பதில் அளித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், "சீல் செய்யப்பட்ட கவர் எதுவும் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் முழு வெளிப்படைத்தன்மையை விரும்புகிறோம்.
இந்த பரிந்துரைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டால், அது அரசாங்கம் நியமித்த குழுவாகவே பார்க்கப்படும். அதை நாங்கள் விரும்பவில்லை. முடிவெடுப்பதை எங்களிடம் விட்டு விடுங்கள்" என்றார். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, வழக்கின் மனுதாரர்களில் ஒருவர், "வங்கிகள் அதானி குழுமத்திற்கு வழங்கிய கடன்களுக்கான பங்குகளின் சரியான மதிப்பீடு மற்றும் அதானி நிறுவனங்களின் தணிக்கை தேவை" என கோரிக்கை விடுத்திருந்தார். மற்றொரு மனுதாரரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், "ஹிண்டன்பர்க் அறிக்கையை ஆராய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது SIT தேவை" என்றார்.