பிரபல நடிகை தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகல்.. சந்திரபாபு நாயுடு மீது சரமாரி குற்றச்சாட்டு..
தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை திவ்யவானி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை திவ்யவானி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆந்திர மாநிலத்தின் தற்போதைய எதிர்க்கட்சியாக தெலுங்கு தேசம் கட்சி அதன் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் செயல்பட்டு வருகிறது. இக்கட்சியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்தார் நடிகை திவ்யவானி. இவர் சர்தார் கிருஷ்ணமநாயுடு என்ற திரைப்படம் மூலம் 1987ல் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். ராதா கோபாலம், பஞ்சாக்ஷரி, வீரா, மகாநதி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் 2018க்குப் பிறகு படவாய்ப்புகள் ஏதும் இல்லாததால் அரசியலில் குதித்தார்.
தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த அவருக்கு அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஜெகன்மோகனின் ஆட்சியை கடுமையாக விமர்சித்துவந்த அவர் ஒய்எஸ்ஆர்பி கட்சியையும் கடுமையாக விமர்சித்துவந்தார். இந்த நிலையில் அக்கட்சியில் இருந்து விலகுவதாக திடீரென்று அறிவித்துள்ள அவர் அக்கட்சி தலைமை மற்றும் நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கட்சியில் இருக்கும் சில பேர் தனக்கு எதிராக ஓயாமல் வேலை பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவர், என் பணிகளுக்காக என்னை அங்கீகரிக்காத கட்சியில் இருந்து விலகுவது மேல் என்று கூறியுள்ளார். மேலும், கட்சித் தலைமையால் தான் ஓரம்கட்டப்பட்டதாகக் கூறியுள்ள அவர், யார் யார் தனக்கு எதிராக வேலை பார்க்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தவில்லை. தான் கட்சியில் சேர்ந்தது முதல் தனது கடின பணிகளை சந்திரபாபு நாயுடு உதாசீனப்படுத்தியே வந்திருக்கிறார். என்னுடைய இறந்த உடலை வைத்து ஓட்டு கேட்கக் கூட அவர் தயங்கமாட்டார் என்று கூறியுள்ளார்.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய முரளி மோகனால் அரசியலில் நிலைத்திருக்க முடியும். ஏனென்றால் அவருக்குத் தொழில் இருக்கிறது. அவர் வசதியானவரும் கூட. நடிகர் என்டிஆரால் தொடங்கப்பட்ட கட்சியில் என்னைப் போன்ற நடிகருக்கு இடமில்லை என்று அவர் கூறியுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த நடிகை ரோஜாவும் கட்சி தன்னை அங்கீகரிக்கவில்லை என்றும் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுவதாகவும் கூறி அக்கட்சியில் இருந்து வெளியேறி ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்பி கட்சியில் இணைந்தார். ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் நகரி தொகுதியில் வெற்றிபெற்ற அவர் தற்போது ஜெகன் மோகன் அமைச்சரவையில் ஒரு அங்கமாக இருக்கிறார்.
ரோஜாவைப்போலவே கட்சியில் இருந்து வெளியேறியிருக்கும் திவ்யவாணி அடுத்து தான் சேரப்போகும் கட்சி குறித்து எதுவும் தகவல் வெளியிடவில்லை.